Published:Updated:

`பிளாஸ்டிக் தடையை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்!' - எச்சரிக்கும் வெள்ளையன்

`பிளாஸ்டிக் தடையை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்!' - எச்சரிக்கும் வெள்ளையன்
`பிளாஸ்டிக் தடையை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்!' - எச்சரிக்கும் வெள்ளையன்

``கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கப்படும் பொருள்களின் பிளாஸ்டிக்குகளை ஒழிக்காமல் உள்நாட்டு தயாரிப்புகளில் உள்ள பிளாஸ்டிக்குகளுக்குத் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாகப் பிளாஸ்டிக் தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” எனத் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வெளிநாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகம் செய்யவும், ஆன்லைன் வணிகம் மூலமாகப் பொருள்களை வாங்கிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை மாநில அரசும் கண்டும் காணாமல் மெளனம் சாதிக்கிறது. இதனால் சில்லறை அழிவு நிலைக்குச் செல்லும். இனிமேல் அந்நியப் பொருளை விற்பனை செய்ய மாட்டோம் என்பதை தெரிவிக்கும் விதமாக அந்நிய நாட்டுப் பொருள்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதிலும் தொடங்கியுள்ளோம்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் தடை விதித்துள்ளது மாநில அரசு. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு திண்பண்டங்கள் பேக்கிங் செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாளுக்குத் தடை விதிக்கப்படவில்லை. ஆனால், உள்ளூர் விற்பனையாளர்களின் கடலைமிட்டாய் பாக்கெட் போன்ற பாக்கெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்களின் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மல்டி லேயர் எனப்படும் பல அடுக்கு பிளாஸ்டிக் தன்மை உள்ளது. அவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது. ஆனால், உள்ளூர் தயாரிப்பு பிளாஸ்டிக் தாளை மறுசுழற்சி செய்யலாம். மறு சுழற்சி செய்யப்பட பிளாஸ்டிக் தாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம்?

உள்நாட்டு வணிகர்களை வஞ்சித்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிலை திட்டம் போட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் மறுசுழற்சியை அரசு ஊக்குவிக்க வேண்டும். பிளாஸ்டிக் தடையை தமிழக அரசு கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக ஆலோசனை சொல்ல தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை காத்திருக்கிறது. தடையை நீக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.

தொடர்ந்து, அந்நிய நாட்டு தயாரிப்பு பொருள்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் 780 கடைகளிலிருந்து 1.40 டன் பிளாஸ்டிக்குகளை பறிமுதல் செய்யப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உள்நாட்டு பிளாஸ்டிக் தாள்களின் மீதான தடையை நீக்கிட வலியுறுத்தியும் மாநகராட்சி ஆணையாளர் ஆலிபி ஜான் வர்க்கீஸை நேரில் சந்தித்துப் பேசினர்.