Published:Updated:

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி! - நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி! -  நீதிமன்றம் உத்தரவு
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி! - நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் நிறைவேற்றிட வலியுறுத்தி, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.  

ஸ்டெர்லைட் ஆலை, கடந்த மே-22-ம் தேதிக்குப் பிறகு, 28-ம் தேதி நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டதுடன் சீல் வைத்து மூடப்பட்டது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலைகுறித்து ஆய்வுசெய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இக்குழு, “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு” என ஆய்வறிக்கையை சமர்பித்தது. இதையடுத்து, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்திட பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என வலுயுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர்,  பல அமைப்பினர், கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில்,  இதே கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள், தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம்  போராட்டம் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுசெய்து, மாவட்ட காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்டது. போராட்டம் நடத்திட அனுமதிகோரி மதுரைக் கிளையில் தி.மு.க சார்பில் தொடரப்பட்ட மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி தி.மு.க எம்.எல்.ஏ-வும் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான கீதாஜீவன் மதுரைக் கிளையில் தாக்கல்செய்துள்ள மனுவில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது . ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், அதற்காக சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சியினர், தூத்துக்குடியில் போராட்டம் நடத்திட முடிவுசெய்தோம். இதற்காக, தூத்துக்குடியில் நடத்திட மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது.

மக்களின் உணர்வுகளையும், எங்களின் கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்குக்  கொண்டுசெல்லும் வகையில்தான் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அமைதியாக இப்போராட்டத்தை  நடத்திட முடிவுசெய்துள்ளோம். காவல்துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். போராட்டம் நடத்த அனுமதி வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், மீனாட்சி அம்மன் கோயில் திடலில் வரும் ஜனவரி 19-ம் தேதி மாலையில் நடத்த சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளலாம் என தி.மு.க-வினர் கூறினர்.