Published:Updated:

“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்!”
“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்!”

டெல்லியைக் கலங்கடித்த விவசாயிகள் போராட்டம்... - டெல்லி பாலா

பிரீமியம் ஸ்டோரி

24 மாநிலங்கள்... 207 சங்கங்கள்... லட்சக்கணக்கில் விவசாயிகள்... நவம்பர் 29, 30 தேதிகளில் டெல்லியை அதிர வைத்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய வட மாநில விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லியை முற்றுகையிடப் புறப்பட்டனர். அப்போது போலீஸார் அவர்களை டெல்லியின் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் மோதல் வெடித்தது. தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் விவசாயிகள் தடுக்கப்பட்டனர். மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் டெல்லி எல்லையில் சென்று சமாதானம் பேசிய பின்பு கலைந்து சென்றார்கள் விவசாயிகள். அதன் பின்பும் விவசாயிகளின் பிரச்னைகள் மீது மத்திய அரசு பாராமுகம் காட்டிவருகிறது. இதன் எதிர்வினையாகத்தான் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் ஒன்றுதிரண்டு தங்கள் பலத்தை மீண்டும் ஒரு முறை காட்டியிருக்கிறார்கள்.

இந்த முறை, நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முதல்நாள் போராட்டத்துக்காக, ராம் லீலா மைதானத்தைப் பதிவுசெய்திருந்தனர். ரயில்களிலும், பிற வாகனங்களிலும் வந்த விவசாயிகளை டெல்லி எல்லை முதல் ராம்லீலா மைதானம்வரை போலீஸார் பாதுகாப்பாக வழிநடத்தினர். வழிநெடுகிலும் கோஷங்களை முழங்கிச் சென்றவர்கள், ராம்லீலா மைதானத்தைப் போராட்டக்களமாக மாற்றினர். அவர்கள், மறுநாள் காலையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்குக் கிளம்பினர். அப்போது, இரும்புத் தடுப்புகளால் போலீஸார் அவர்களைத் தடுத்தனர். பிறகு, ‘நாடாளுமன்றச் சாலைவரை மட்டுமே அனுமதி. அங்கு மாலைவரை தர்ணா போராட்டம் நடத்திக் கொள்ளலாம்’ என்றனர் போலீஸார்.

“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்!”

அதன் பின்பு பிரமாண்டமான பேரணி தொடங்கியது. மாநிலவாரியாக அணிவகுத்த விவசாயிகள், மத்திய பி.ஜே.பி ஆட்சிக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேரணியை வழிநடத்திய அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆஷிஸ் மிட்டல், “ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு லாபகரமான விலையைப் பெற்றுத்தருவதாக 2014-ல் பி.ஜே.பி கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு அதை அவர்கள் செய்யவில்லை. அதையே செய்ய முடியாதவர்கள் இப்போது, 2022-ம் ஆண்டில்  விளைபொருள்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்கச் செய்வோம் என்கிறார்கள். இது விவசாயிகளை முட்டாள்கள் ஆக்கும் செயல்” என்றார் காட்டமாக.

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் சகிதமாக, அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் அரை நிர்வாண நிலையில்  பேரணியில் சென்றனர். வழிநெடுகிலும் அவர்கள் பல இடங்களில் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். பேரணி நாடாளுமன்றச் சாலையை அடைந்தபோது, அங்கு அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக விவசாயிகளில் சுமார் ஏழு பேர், திடீரென தங்களின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாகத் தரையில் படுத்துப் போராட்டம் செய்தனர். அதைக் கண்டு போலீஸார் மட்டுமல்லாமல், பிற மாநில விவசாயிகளும் திகைத்துப்போனார்கள். பிற மாநில விவசாயிகள் சிலர் கண்ணீர் விட்டபடியே, “இதுபோன்ற நிர்வாணப் போராட்டங்கள் தேவை. ஆனால், நமது கண்ணியத்தை இழக்க வேண்டாம்” என்று தமிழக விவசாயிகளைச் சமாதானப்படுத்தினர். அப்போது தமிழக விவசாயிகள், “எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். எங்களிடம் இருப்பது இந்த உயிர் மட்டும்தான். போராடுவதற்காகவாவது அந்த உயிர் வேண்டும் என்பதால் நிர்வாணமாகப் போராடுகிறோம். லாபகரமான விலை இல்லை. கடன் தள்ளுபடி இல்லை. மத்திய அரசு தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சித்துவருகிறது. எங்களை அம்மணமாக்கியது மத்திய அரசுதான். அவமானப்பட வேண்டியது நாங்கள் இல்லை; மத்திய அரசுதான்” என்றபோது சுற்றி நின்ற பிற மாநில விவசாயிகள் பலர் அவர்களைச் சூழ்ந்துநின்று நிர்வாணத்தை மறைத்தனர்.

“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்!”

பிற்பகல் 3 மணிக்கு மேல் வந்த ராகுல் காந்தி, அர்விந்த் கெஜ்ரிவால், சரத்பவார், பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, மேதா பட்கர் உள்ளிட்ட தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் விவசாயிகள் மத்தியில் உரையாற்றினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, “விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றுதிரண்டு வந்திருக்கிறோம். அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தம் மூலம் முப்பதாயிரம் கோடி ரூபாயைத் தூக்கிக்கொடுத்த பிரதமர் மோடி, விவசாயிகளின் கடனைக் கண்டுகொள்ளவில்லை. பதினைந்து கார்பரேட் நிறுவனங்களுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் சலுகை வழங்கிய மோடிக்கு, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மனமில்லை” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஒட்டுமொத்த நாடும் இந்தப் போராட்டத்தை உற்றுக் கவனித்தது. ஆனால், கவனிக்க வேண்டிய மத்திய அரசு, கவனித்ததா என்பதே ஒட்டுமொத்த மக்களின் கேள்வி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு