Published:Updated:

‘அரசியல் பேசாதீர்கள்; வந்த வேலையைப் பாருங்கள்!’-அ.ம.மு.க ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு

பெண்கள், ஆண்கள் என மாலை வெயிலில் நிற்க முடியாமல் சூட்டையும் பார்காமல் சாலையில் அமர்ந்திருந்தனர். ஆனால் வெகு நேரமாகியும் 7 மணி வரை கட்சி துணை பொதுச் செயலாளர் தினகரன் வரவில்லை. இந்நிலையில் மேடையில் கட்சியினர் மைகைப் பிடித்து தங்கள் இஷ்டத்திற்கு அரசியல் பேசி வந்தனர்.

‘அரசியல் பேசாதீர்கள்; வந்த வேலையைப் பாருங்கள்!’-அ.ம.மு.க ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு
‘அரசியல் பேசாதீர்கள்; வந்த வேலையைப் பாருங்கள்!’-அ.ம.மு.க ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு

நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.ம.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க சேத்தியாத்தோப்பு முதல் கம்மாபுரம் வரை 40 கிராமங்களில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த முடிவுசெய்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் இந்த முடிவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். அ.ம.மு.க சார்பில், கட்சி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில், சேத்தியாத்தோப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம், நேற்று மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்னை என்பதால், அ.ம.மு.க கட்சியினர் மட்டும் இல்லாமல் சம்பந்தப்பட்ட 40 கிராமங்களில் இருந்தும் ஆண்களும் பெண்களும், கட்சி வித்தியாசம் இல்லாமல் ஏராளமான கிராம மக்கள்      4 மணி முதல் சேத்தியாத்தோப்பு காவல் நிலையம் அருகில் இருந்த ஆர்ப்பாட்ட மேடை முன்பு வந்து காத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் என்பதால், மேடை முன்பு சேர்கள் ஏதும் போடப்படவில்லை. இதனால் மக்கள், மாலை வெயிலில் நிற்க முடியாதபோதும், சூட்டையும் பார்க்காமல் சாலையில் அமர்ந்திருந்தனர். ஆனால், வெகு நேரமாகியும் 7 மணி வரை கட்சி துணை பொதுச் செயலாளர் தினகரன் வரவில்லை. இந்நிலையில், மேடையில் கட்சியினர் மைகைப் பிடித்து தங்கள் இஷ்டத்திற்கு அரசியல் பேசிவந்தனர். காலதாமதம் ஆனதால், கோபத்தில் இருந்த கிராம மக்கள் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் தங்களின் வாழ்வாதார பிரச்னை குறித்துப் பேசுவார்கள் என வந்தால், ஆர்ப்பாட்ட மேடையை அரசியல் மேடையாக மாற்றியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு கட்டத்தில்,  திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திருவேற்காடு சீனிவாசன் பேசியபோது அமைதி இழந்த பெண்கள் எழுந்து, அரசியல் பேசாதீர்கள் எனச் சத்தம்போட்டனர்.  இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. உடன் கட்சி முன்னணி நிர்வாகிகளும் கிராம முக்கியஸ்தர்களும் அவர்களைச் சமாதானப்படுத்தினார்கள். அதன் பின்னர் பேசியவர்கள், அரசியல் பேசாமல் என்எல்சி நிலம் கையகப்படுத்துவது மட்டும் குறித்து பேசினார்கள். பின்னர் 7.15 மணிக்கு டி.டி.வி. தினகரன் மேடைக்கு வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசிய தினகரன், இது கண்டன ஆர்ப்பாட்டம் என்பதை மறந்து, கண்டனப் பொதுக் கூட்டம் போல் பேசிவிட்டு, ஆர்ப்பாட்டம் ஏதும் செய்யாமல் சென்றுவிட்டார்.