Published:Updated:

திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்!

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் மற்றும்  தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என்று தொழிலாளர் சங்கங்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆவடியில் உள்ள தலைமை அஞ்சலகம் நேற்று செயல்படவில்லை. அங்கு பணியாற்றிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.  பெரியபாளையம் ஐ.ஒ.பி வங்கி முன்பும் மறியல் நடைபெற்றது.

 இதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் எம்.பழனி தலைமைதாங்கினார். இதில், சி.பி.எம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், வட்ட நிர்வாகிகள் அருள், குமார் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பி.ரவி, மாரிமுத்து, முருகேசன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ரமா, பொருளாளர் ஏ.பத்மா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.

பொன்னேரியில் நடைபெற்ற சாலை மறியலுக்கு மாவட்ட துணைச் செயலாளர் என்.ஜீவா தலைமை தாங்கினார். இதில், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.துளசிநாராயணன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அ.து.கோதண்டன், துணைத் தலைவர் இ.தவமணி உட்பட்ட 45பேர் கைதாகினர்.

திருவாலங்காடு பிடிஒ அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மறியலுக்கு சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். குமரவேல் தலைமை தாங்கினார். இதில், மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், சிஐடியூ மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உட்பட 150பேர் கைதாகினர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், விசைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்.கே.பட்டியில் நடைபெற்ற மறியலுக்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சி.பெருமாள் தலைமைதாங்கினார். இதில், விசைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.கணேசன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அப்சல் அகமது, ஆட்டோ சங்க தலைவர் ஏழுமலை 60 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ 18-ஆயிரம் வழங்க வேண்டும், வேலையின்மையைப் போக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.