Published:Updated:

“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!”

“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!”

பிரச்னை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர், சுல்தான்பேட்டை, சாலைபுதூர், வலசுப்பாளையம், வஞ்சிபுரம், கிருஷ்ணாபுரம், சின்னமநாயக்கன்பாளையம், கரையாம்பாளையம் ஆகிய ஊர்களின் வழியே உயர் மின்கோபுரங்கள் அமைத்து, கேரளா மாநிலம் திருச்சூர் வரை மின்சாரத்தைக் கொண்டு செல்ல ஆயத்தப்பணிகளைத் தொடங்கியுள்ளது, மத்திய அரசின் ‘பவர்கிரிட்’ நிறுவனம். மாவட்ட வருவாய்த்துறை உதவியுடன் நிலம் கையகப் படுத்துவதற்கான நில அளவைப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 

“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!”

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்புக் கடிதம் எதுவும் வழங்காமல், அத்துமீறி நிலத்துக்குள் நுழைந்து, நிலங்களை அளந்து அடையாளக் கல் நடுவதாக வருவாய்த்துறை மீது குற்றம் சாட்டுகிறார்கள், விவசாயிகள். இப்பிரச்னை குறித்து நம்மிடம் பேசினார், கோயம்புத்தூர் மாவட்டம், சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி. “எங்க தென்னந் தோப்புக்குக் கதவு போட்டு பூட்டி வெச்சுருந்தோம். திருடருங்க மாதிரி பூட்டை உடைச்சு எங்க தோட்டத்துக் குள்ள புகுந்து நிலத்தை அளந்தாங்க. ‘எதுக்குய்யா தோட்டத்துக்குள்ள புகுந்து இப்படி அக்கிரமம் செய்றீங்க’னு கேட்டதுக்குத் ‘தென்னை மரங்களை வெட்டிட்டு, மின்சாரக் கோபுரங்கள் வைக்கப் போறோம்’னு சொன்னாங்க. ‘எங்களை வேணும்னாலும் வெட்டிக்கங்க... குழந்தைபோல வளர்த்த தென்னை மரங்களை வெட்டாதீங்க’னு தடுத்ததுக்குப் போலீஸை வெச்சு இழுத்துக் கிட்டுப் போயிட்டாங்க. நிலத்தை அளந்தபிறகுதான் என்னை விட்டாங்க” என்று கதறுகிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!”

அதே ஊரைச்சேர்ந்த அருண்குமார், சரவணன் ஆகிய இரண்டு விவசாயிகளையும் இழுத்துச் சென்று கைகளை முறுக்கி, தென்னை மரத்துடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு நில அளவை முடிந்த பிறகுதான் விடுவித்திருக்கின்றனர், காவல்துறையினர்.

உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ஈசன், “மத்திய அரசுக்குச் சொந்தமான பவர் கிரிட் நிறுவனம், பல மாநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் 11 மின் வழித்தடங்களை அமைக்கவுள்ளது. இந்த மின் வழித்தடங்கள் பெரும்பாலும் விளைநிலங்கள் வழியாகத்தான் அமைக்கப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், தென்னை மரங்கள் மற்றும் பலவகை மரங்கள் அடியோடு வெட்டிச் சாய்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!”

சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் எந்த விதமான முன்னறிவிப்பும் செய்யாமல் நிலத்தை அளந்து கல் ஊன்றுகிறார்கள். வருவாய்த்துறையின் இந்த அத்துமீறல்களை விவசாயிகள் ஒன்று திரண்டு தடுக்க முயற்சித்தால், காவல்துறை மூலம் விவசாயிகள் அடித்து விரட்டப்படுகிறார்கள். அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக விவசாயிகள் மீது வழக்குத் தொடரப்படுகிறது. மேலும் கைது செய்து சிறையில் அடைப்பது, பொய்வழக்கு போடுவது எனக் கடந்த மூன்று மாதங்களாகத் தமிழக அரசால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறார்கள், விவசாயிகள். பல மாற்று வழிகள் இருக்கும்போது விளைநிலத்தில் கொண்டு போக வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் எங்கள் கேள்வி. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பவர்கிரிட் நிறுவனத்துக்காகத் தீவிரமாக வேலை செய்கின்றன. 

“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!”

உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் பல வடிவங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தற்போது, ஈரோடு மாவட்டத்தில் மூலக்கரை, பெருந்துறை, மேட்டுக்கடை ஆகிய பகுதிகளிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் வி.கள்ளிப்பாளையம் பகுதியிலும், நாமக்கல் மாவட்டத்தில் பவானி ரோடு பகுதியிலும், சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, சேஷன்சாவடி ஆகிய ஊர்களிலும், தருமபுரி மாவட்டத்தில் எட்டியாம்பட்டி பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளிப்பட்டுப் பகுதியிலும், வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு பகுதியிலும் தொடர் காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள், விவசாயிகள். இவர்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்” என்றார், ஈசன்.

13 மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில்... தமிழக அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனையான விஷயம்.

ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி