Published:Updated:

`அப்போ, முதல்வரை கைது செஞ்சிருவீங்களா?' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் கிராம மக்கள்!

`அப்போ, முதல்வரை கைது செஞ்சிருவீங்களா?' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் கிராம மக்கள்!
`அப்போ, முதல்வரை கைது செஞ்சிருவீங்களா?' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் கிராம மக்கள்!

கலவரத்தைத் தூண்டும் விதமாக துண்டுப்பிரசுரம் விநியோகிக்கத் தூண்டியதாக, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, கிராம மக்கள் கோயில்மணி அடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட  தமிழக அரசு,  கடந்த மே 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதுடன் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.  இதை எதிர்த்து ஆலைத்தரப்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலைகுறித்து ஆய்வுசெய்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை நியமித்தது. ”தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு” எனத் தெரிவித்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, சில நிபந்தனைகளுடன் ஆலையை  மீண்டும் திறக்க உத்தரவிட்டது தீர்ப்பாயம்.

ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வாழவாதாரம் தொடர்ந்து பாதிக்கபட்டுள்ளதால் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஒப்பந்தத் தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் என இருதரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 19-ம் தேதி பிற்பகலில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பத்மநாபமங்களம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி பகுதியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்துகொண்டிருந்தனர்.

போலீஸாரின் விசாரணையில், கடலூர் மாவட்டம் மூர்த்திகுப்பத்தைச் சேர்ந்த நடேசன், கோவில்பட்டியைச் சேர்ந்த சந்தனக்குமார், நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த கலீல்ரகுமான் ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத்  தெரியவந்தது.  அந்த மூன்று பேரையும், கலவரத்தைத் தூண்டும் விதமாக துண்டுப்பிரசுரம் விநியோகிக்கத் தூண்டியதாக, தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை புதூர்பாண்டியாபுரம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் போலீஸார் 153 ஏ(பி), 505 (1)(பி) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் கைதுசெய்தனர். பின்னர், தூத்துக்குடி ஜே.எம்-3  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சந்தோஷ் கைதுசெய்யப்பட்ட தகவல் அறிந்த பண்டாரம்பட்டி கிராம மக்கள், கிராமத்தில் உள்ள கோயில் மணியை அடித்தும்,

ஒலிபெருக்கியிலும் மக்களுக்கு தகவலைப் பரப்பினார்கள். இதையடுத்து, கோயில் முன்பு கிராம மக்கள் திரண்டனர். சந்தோஷை கைதுசெய்ததைக் கண்டித்தும், விடுதலைசெய்ய வலியுறுத்தியும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கிராமத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சந்தோஷின் அம்மா வசந்தியிடம் பேசினோம், “திடீர்னு ஒரு போன் வந்துச்சு. என்னோட மகன் உடனே கிளம்பிப்போனான். சிப்காட் போலீஸுக்கு தகவல் சொன்னோம். ஆனா, ”விசாரிச்சுட்டு சொல்றேன்னு இன்ஸ்பெக்டர் சம்பத் சொன்னாரு” அதுக்கப்புறம் எந்தப் பதிலுமே இல்ல. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்துட்டுவருபவர்களை  போலீஸ், விசாரணை என்ற பெயரில்  திடீர் திடீர்னு கைது செய்யுறாங்க. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்தான் வாக்குறுதி கொடுத்துள்ளார். முதல்வரையும் போலீஸ்காரங்க கைதுசெஞ்சுருவாங்களா? என் மகனுக்கு என்ன நடந்தாலும் போலீஸ்காரங்கதான் பொறுப்பு. மகனை விடுதலைசெய்யும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.  

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற பின்னர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் ரஜினி, நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்தபோது, ரஜினியைப் பார்த்து, “நீங்க யாரு” என்று கேட்ட சந்தோஷ்தான் இவர்.