Published:Updated:

மூடப்பட்ட பட்டாசு ஆலைகள்; தவிக்கும் 8 லட்சம் தொழிலாளர்கள் - சி.ஐ.டி.யூ-வினர் நூதன போராட்டம்

இரா.கோசிமின்
மூடப்பட்ட பட்டாசு ஆலைகள்; தவிக்கும் 8 லட்சம் தொழிலாளர்கள் - சி.ஐ.டி.யூ-வினர் நூதன போராட்டம்
மூடப்பட்ட பட்டாசு ஆலைகள்; தவிக்கும் 8 லட்சம் தொழிலாளர்கள் - சி.ஐ.டி.யூ-வினர் நூதன போராட்டம்

பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்கக் கோரி, தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியூ சங்கத்தினர், விருதுநகர் மாவட்டத்தில் 50 இடங்களில் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.
 

விருதுநகர் மாவட்டத்தில், 1007 பட்டாசு ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த ஆலைகளை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்திவருகின்றனர். இந்நிலையில், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அக்டோபர் 23-ம் தேதி, உச்ச நீதிமன்றம் விதித்தது. இதனால் 8 லட்சம் தொழிலாளர்களும், வேலையில்லாத காரணத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். ஆலைகளைத் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனாலும், இதுவரை ஆலைகள் திறக்கப்படவில்லை. பலர் வேலைக்காக வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், உடனடியாக ஆலைகளைத் திறக்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிஐடியூ சார்பில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை, சாத்தூர், கன்னிசேரிபுதூர், ஓ.கோயில்பட்டி, சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட 50 இடங்களில் நடைபெற்றது.

இதுதொடர்பாக பட்டாசுத் தொழிலாளர்கள் கூறும்போது, 'பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு 80 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், ஆலைகளைத் திறக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், வேலையின்றித் தவித்துவருகிறோம். எனவே, ஆலைகளை உடனடியாகத் திறந்து, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர். நாளையும் 50 இடங்களில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற உள்ளது.