Published:Updated:

திடீர் டிஸ்மிஸ்! - 15 நாள்களாக வெயிலிலும் பனியிலும் போராடும் கெம்ப்ளாஸ்ட் தொழிலாளர்கள்

டிஸ்மிஸ்

திடீர் டிஸ்மிஸ்! - 15 நாள்களாக வெயிலிலும் பனியிலும் போராடும் கெம்ப்ளாஸ்ட்  தொழிலாளர்கள்
திடீர் டிஸ்மிஸ்! - 15 நாள்களாக வெயிலிலும் பனியிலும் போராடும் கெம்ப்ளாஸ்ட் தொழிலாளர்கள்

அகில இந்திய அளவில்  கடந்த 8, 9-ம் தேதி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., போன்ற மத்திய தொழிற்சங்கத்தின் சார்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மாவட்டம் மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் பயிற்சித் தொழிலாளர்கள் 100 பேர் ஆன் தி ஸ்பார்ட் -லையே டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதையடுத்து கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தின் நுழைவு வாயிலிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக இன்றோடு 15 நாளாகப் போராடி வருகிறார்கள். லேபர் அலுவலகம், சொல்லியும் கெம்ப்ளாஸ்ட் நிர்வாகம் இறங்கி வராமல் பிடிவாதமாக இருப்பதால், அப்பகுதி முழுவதும் பரபரப்பாக இருக்கிறது.


 

இதுபற்றி கெம்ப்ளாஸ்ட் பயிற்சி ஊழியர் குருசங்கர், ``கடந்த 2017 மே மாதம் சுமார் 127 பேர் பயிற்சி ஊழியர்களாக கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் சேர்ந்தோம். எங்களுக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் கொடுக்கப்படும். 3 ஆண்டுகள் கழித்து எங்களை நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக்கொள்வோம் என்று ஆர்டர் கொடுத்ததால் நாங்கள் இந்த நிறுவனத்தில் சேர்ந்தோம்.

நாங்கள் பேருக்குதான் பயிற்சி ஊழியர்கள் ஆனால், உற்பத்தி உட்பட அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம். இந்த நிலையில், நிர்வாகம் எங்களை திடீரென வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அதையடுத்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில் எங்களுக்குள் சங்கம் தொடங்க முயற்சி செய்தோம். அதை அறிந்த நிர்வாகம் 5 பேரை வேலை நீக்கம் செய்தார்கள். கடந்த 8,9-ம் தேதி அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளப் போவதாக நிர்வாகத்திடம் நோட்டீஸ் கொடுத்தோம்.

அதற்கு நிர்வாகம் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அதையடுத்து 95 பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டோம். போராட்டம் முடித்து 10-ம் தேதி வேலைக்கு வரும்போது நுழைவு வாயிலேயே எங்களை நிறுத்தி டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்தார்கள். அதையடுத்து கடந்த 15 நாள்களாகச் சோறு தண்ணி உண்ணாமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 100 பேரும் நுழைவு வாயிலேயே போராடி வருகிறோம். லேபர் அலுவலகம் சொல்லியும் கேட்கவில்லை. அதையடுத்து, நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம்'' என்றார்கள்.

கெம்ப்ளாஸ்ட் பயிற்சி ஊழியர் பெருமாள், ``இந்தியா ஜனநாயக நாடு. இங்கு தொழிலாளர்கள் தங்களுக்கான சங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இந்திய அரசியலமைப்பு சட்டம் அங்கீகாரம் வழங்கி இருக்கும் பட்சத்தில் எங்கள் குற்றவாளிகளாக முன் அறிவிப்பு எதுவும் செய்யாமல் வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்திருப்பது முதலாளித்துவத்தின் ஆணவத்தைக் காட்டுகிறது. எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிஸ்மிஸ் ஆர்டரை திரும்பப் பெறும் வரை எங்க போராட்டம் தொடரும்'' என்றார்.