Published:Updated:

புதுக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் - 2,000-க்கும் மேற்பட்டோர் கைது!

புதுக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்  - 2,000-க்கும் மேற்பட்டோர் கைது!
புதுக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் - 2,000-க்கும் மேற்பட்டோர் கைது!

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு போராடிய 2,000-க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்பரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாசில்தார், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சொடி காணப்பட்டன. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவில்லை. ஆசிரியர்கள் இன்றி பள்ளிகள் இயங்கி வந்தது. வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாகத்தில் ஒன்று கூடினார்கள். தொடர்ந்து புதுக்கோட்டை- மதுரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் மற்றும் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 500 பெண்கள் உள்பட  2,650 பேரை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.