அலசல்
Published:Updated:

சம்பளத்துக்காக மட்டுமே போராடவில்லை

சம்பளத்துக்காக மட்டுமே போராடவில்லை
பிரீமியம் ஸ்டோரி
News
சம்பளத்துக்காக மட்டுமே போராடவில்லை

வா.மணிகண்டன், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்

ரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ‘சம்பளம்தான் பிரச்னை’ என்று நினைக்கிறார்கள். பிரச்னை சம்பளம் மட்டுமல்ல... தமிழகத்தில் 3,500 தொடக்கப் பள்ளிகளை இணைக்கிறார்கள். ‘இணைப்பு’ என்பது நாசூக்கான சொல். ‘மூடுதல்’ என்பதே அதன் புதைகுழி அர்த்தம். ஆரம்பக் கல்வியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான முதல்படி இது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைகிறது எனில், அதைச் சரிசெய்வதுதான் நல்ல அரசுக்கு அழகு. அதை விடுத்து, பள்ளிகளை மூடினால் மாணவர்களின் கதி என்னவாகும்? இன்னமும்கூட, பெண்ணுக்கான கல்வியை மறுக்கும் பெற்றோர் இங்கு உண்டு. பெண்களின் எதிர்காலத்தில் மண் அள்ளிப்போடுவதுதான் அரசின் லட்சணமா? ஆனால், இதே அரசுதான் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து, அந்தப் பள்ளிகளுக்கு பல கோடி ரூபாயை ஒதுக்குகிறது. இதில் கோடிகளில் கமிஷன் புரள்கிறது. போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். அதைக் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் 3,500 சத்துணவு மையங்களை மூடப்போகிறது இந்த அரசு. இலவச உணவு வழங்கப்படுகிறது என்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வருகிறார்கள். மக்கள் நலன் பேணுகிற அரசு, சத்துணவு மையங்கள் இல்லாத ஊர்களில் புதிய மையங்களைத் தொடங்க வேண்டுமே தவிர, போக்கற்ற காரணங்களைச் சொல்லி அவற்றை மூடக்கூடாது. இந்தக் கோரிக்கையும் போராட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

சம்பளத்துக்காக மட்டுமே போராடவில்லை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 27,000 கோடி ரூபாயைப் பிடித்திருக்கிறார்கள். அதற்கான கணக்குவழக்கு விவரங்களைச் சொல்லுங்கள் என்று ஊழியர்கள் கேட்கிறார்கள். பழைய ஓய்வூதிய முறையைக் கொண்டுவாருங்கள் என்று கேட்கிறார்கள். என்ன தவறு இருக்கிறது? உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நடுநிலைப் பள்ளிகளுக்கும், ஆரம்பப் பள்ளிகளுக்கும் பணியிறக்கம் செய்து பந்தாடுகிறார்கள். அது தவறில்லையா? வேறு எந்தப் பணியிலாவது நாம் பணியிறக்கம் செய்வதை ஏற்றுக்கொள்வோமா? இவை எதுவுமே பொதுச்சமூகத்தின் கண்களில் படாதா? பிரச்னையின் அடிப்படை அப்படி மடைமாற்றப்பட்டிருக்கிறது. ‘அரசின் வருமானம் முழுக்கவும் சம்பளமாகத்தான் கரைகிறது’ என்று போகிற போக்கில் சொல்கிறார்கள். ஆக, ஊழலாக எந்தப் பணமும் போவதில்லையா?

சம்பளத்துக்காக மட்டுமே போராடவில்லை

ஒவ்வொரு முறையும் போராட்டம் நடக்கும் போதெல்லாம் ‘சம்பளம் கிடையாது, விடுமுறை கிடையாது’ என்று மிரட்டுகிறார்கள். ‘மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று அறிக்கையை வெளியிட்டு மக்களிடம், ‘ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மனசாட்சி இல்லாத ஜடங்கள்’ என்ற வெறுப்பை உண்டாக்குகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு அழைத்து உருட்டி மிரட்டி, கொஞ்சம் நாள் அவகாசம் கேட்டு, பிரச்னையை வாபஸ் வாங்கவைக்கிறார்கள். ‘ஆசிரியர்கள் எப்போதாவது மாணவர்களின் நலனுக்காகப் போராடியிருக்கிறார்களா?’ என்று அதிமேதாவித்தனமாகக் கேட்கிறார்கள் சிலர். இந்தச் சமூகமே ‘கரெப்டெட்’ சமூகம்தான். அடுத்தவர்களைக் கேள்வி கேட்டுத் தன்னை யோக்கியமாகக் காட்டிக்கொள்ளும் மனோபாவம் அது. மாணவர்களின் நலன் பேணுகிற ஆசிரியர்கள், மிகப் பரவலாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் அத்தனை பேரும் மோசமானவர்கள், சோம்பேறிகள் அல்ல.  இதே போராட்டத்தில், கைது செய்யப்பட்ட நிலையில் பாடம் எடுத்த ஆசிரியரைக்கூட நாம் பார்த்தோம். பல பள்ளிகளில், பிச்சையெடுக்கும் அளவுக்கு இறங்கி நன்கொடை கேட்டு, வசூல் செய்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலரை நேரடியாக நான் அறிவேன்.

இந்தப் போராட்டத்தில் சுயநலமே இல்லையா என்றால் இருக்கிறதுதான். எந்தவொரு பொதுக்காரியத்திலும் சுயநலம் இருக்கத்தான் செய்யும். அதற்காக, ‘உனக்கு எந்த உரிமையும் கிடையாது. அரசாங்கத்திடம் கைகட்டிச் சேவகம் செய்’ என்பது அடிமைத்தனத்தை உருவாக்கும். ஆதாயங்களைக் கொடுத்துவிட்டு, அவர்கள் தங்களின் பணிகளில் முழுத்திறமை யையும் கொண்டுவருவதை உறுதிப்படுத்துங்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், அதையும் தாண்டி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள் இருக்கின்றன.

தமிழகக் கல்வித்துறை உள்ளுக்குள் அரித்துக்கிடக்கிறது. இங்கு நல்லது செய்யக்கூட லஞ்சம் கேட்கிறார்கள். அரசுப் பள்ளிகள், சத்துணவு மையங்கள் மூடல், எதற்கெடுத்தாலும் கமிஷன் என்று  தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது கல்வித் துறை. கொஞ்சம் கவனித்து, இந்தப் போராட்டம் எதற்கானது என்று காது கொடுத்துக் கேட்டால் கல்வித்துறையின் அவலம், தமிழக அரசுத் துறைகளின் சிக்கல்கள் எல்லாம் வெளியில் தெரியும். எல்லாவற்றையும் மூடிமறைத்து, ‘சம்பளத்துக்கான போராட்டம் மட்டும்தான்’ என்று தயவுசெய்து முழுப்பூசணிக்காயைச் சோற்றில் புதைக்க வேண்டாம். தமிழகத்தின் கடன், கடந்த ஆகஸ்ட் மாதமே பல லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். நாளுக்கு நாள் வட்டி ஏறிவருகிறது. தமிழகத்தின் நிதி ஆதாரத்தை மீட்டெடுக்க இன்னமும் பல ஆண்டுகளாகும். எதிர்காலத்தில் தமிழகத்தின் கஜானா என்னவாகப் போகிறது என்று எந்தக் கணிப்பும் இல்லை.  தமிழக ஆட்சியாளர்கள் குருட்டு வாக்கில் பறந்துகொண்டிருக்கிறார்கள். வெறுமனே போராட்டம் என்று இல்லாமல், இந்தப் போராட்டத்தின் வழியாக இதையெல்லாம் பற்றிக் கொஞ்சமேனும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்!

படம்: வி.நரேஷ்குமார்