Published:Updated:

மக்கள் தொடர்பு அலுவலரை கண்டித்து போராட்டத்தில் குதித்த செய்தியாளர்கள்! - விருதுநகரில் பரபரப்பு

PRO

மக்கள் தொடர்பு அலுவலரை கண்டித்து போராட்டத்தில் குதித்த செய்தியாளர்கள்! - விருதுநகரில் பரபரப்பு
மக்கள் தொடர்பு அலுவலரை கண்டித்து போராட்டத்தில் குதித்த செய்தியாளர்கள்! - விருதுநகரில் பரபரப்பு

அரசு நிகழ்வுகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்காத மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை (பி.ஆர்.ஓ.) கண்டித்து விருதுநகர் மாவட்டச் செய்தியாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வதே செய்தித்தொடர்பு துறையின் பணி. அதேபோல ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், அரசின் அறிவிப்புகளை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பணியாகும். இதற்கென மக்கள் தொடர்பு அலுவலர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகள் மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்வுகளை ஊடகங்களுக்குத் தகவலாக தெரிவிக்க வேண்டும். விருதுநகர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.

விருதுநகர் மாவட்ட செய்தித்தொடர்புத் துறை அலுவலகத்திலிருந்து கடந்த இரண்டு மாதங்களாக செய்தியாளர்களுக்கு முறையான தகவல் அளிக்கப்படவில்லை. மாறான நிகழ்ச்சி முடிந்த பின்பே செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் முன் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

``செய்தியாளர்களைத் திட்டமிட்டு புறக்கணிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல. ஒரு சில நிகழ்வுகள் திடீரென ஏற்பாடாகி அவசர அவசரமாக நடக்கின்றன. அதனால் உடனடியாக தங்களுக்கு அதுகுறித்த தகவல்களைத் தெரிவிக்க முடியவில்லை. அடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது. ஒவ்வொரு தகவல்களையும் தெரிவித்துவிடுகிறோம்'' என பி.ஆர்.ஓ. உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பினர்.