Published:Updated:

`சம்பாதிக்கிற பணமெல்லாம் தண்ணீர் வாங்கவே செலவாகிடுது!’ - காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்

`சம்பாதிக்கிற பணமெல்லாம் தண்ணீர் வாங்கவே செலவாகிடுது!’ - காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்
`சம்பாதிக்கிற பணமெல்லாம் தண்ணீர் வாங்கவே செலவாகிடுது!’ - காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்

சம்பாதிக்கும் பணமெல்லாம் தண்ணீருக்கே செலவாகிவிடுவதால், உடனடியாகத் தண்ணீர் வழங்கக் கோரி, காலி குடங்களுடன் கிராமப் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, சிந்துவம்பட்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில், சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் குடிப்பதற்கு மட்டுமின்றி, குளிக்கவோ,  வீட்டுப் பயன்பாட்டுக்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். எனவே, குடிப்பதற்கும் வீட்டுப் பயன்பாட்டுக்கும் காசு கொடுத்தே தண்ணீர் வாங்கிவருகின்றனர். கூலி வேலை செய்து தாங்கள் சம்பாதிக்கும் பணமெல்லாம் தண்ணீருக்கே செலவாகிவிடுவதாக சிந்துவம்பட்டி மற்றும் அய்யம்பட்டி கிராம மக்கள் புலம்புகிறார்கள்.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கனி என்பவர் கூறும்போது, இருக்கன்குடியில இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் எங்கள் கிராமம் உள்ளது. எங்கள் ஊரில் எல்லோருமே கூலி வேலைதான் செய்றோம். ஆனா, தண்ணீருங்கிறதே சுத்தமாக இல்லை. குடிக்கிறதுக்கு மட்டுமில்லை. குளிக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க என அன்றாட புழக்கத்துக்குக்கூட இல்லை. இதுசம்பந்தமா ஏற்கெனவே ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதே மிகவும் சிரமமாக உள்ளது. இன்னிக்கு ஒரு லாரில வந்திருக்கோம்.  உடனடியா எங்க பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைகளுடன் அடுத்த வாரமும் இங்கே வருவோம்'' என்று தெரிவித்தார்.

முனியம்மாள் என்பவர் கூறும்போது, ``மற்ற எந்த வசதியும் இல்லை என்றாலும் தண்ணீரைக் கொண்டுகூட ஏதோ சமாளிப்போம். ஆனா, எங்கள் கிராமத்தில் தண்ணீர்கூட இல்லை. நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமெல்லாம் தண்ணீருக்கே செலவாகிடுது. எங்களோட பிள்ளைகளுக்கு செலவுக்குப் பணம் தர முடியல. வீட்டுச் செலவுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். இருக்கன்குடி அணையில் இருந்து எங்கெங்கோ உள்ள ஊர்களுக்கெல்லாம் தண்ணீர் கொண்டுபோறாங்க. ஆனால், பக்கத்துல இருக்க எங்கள் ஊருக்கு வரல. எனவே, இருக்கன்குடியில் இருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும்'' என்றார் வேதனையோடு.