Published:Updated:

ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்க நினைத்ததா காவல் துறை? - சேலம் பரபரப்பு

ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்க நினைத்ததா காவல் துறை? - சேலம் பரபரப்பு
ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்க நினைத்ததா காவல் துறை? - சேலம் பரபரப்பு

ஆசிரியர்கள் போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திவரும் நிலையில், இன்று சேலத்தில் நடந்த ஆசிரியர்கள் போராட்டத்திற்குள் காவல் துறை ஆளில்லா ஆம்புலன்ஸூகளை அனுப்பி, புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இன்று, பழைய நாட்டாண்மைக் கழக கட்டடத்தின் எதிரே உள்ள சாலையில், சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.  

ஆசிரியர்கள் சிலர், வீட்டில் இருந்தே ரொட்டித் துண்டுகளையும்  நியூஸ் பேப்பர்கள், குடைகளையும் கொண்டுவந்திருந்தார்கள். போராட்டத்தின்போது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள குடைகளைப் பிடித்துக்கொண்டும், தலைமீது நியூஸ் பேப்பர்களை போட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

போராட்டம் நடைபெற்ற நாட்டாண்மைக் கழக கட்டட சாலை முழுவதும் ஆசிரியர்கள் தலைகளே தென்பட்டன. சாதாரணமாக இந்த சாலையில் 100 பேர் கூடினாலே, டூவிலரை கூடக் காவல்துறை உள்ளே வர அனுமதிக்காது. ஆனால், 5000-க்கும் மேற்பட்டவர்கள் கூடி போராட்டம்  நடத்திக்கொண்டிருக்கும்போது, இரண்டு ஆம்புலன்ஸ்கள்  கூட்டத்திற்குள் புகுந்து வந்தது. இந்தச் சாலை அரசு மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய சாலையும் இல்லை.

கூட்டத்திற்குள் ஊர்ந்து வந்த ஆம்புலன்ஸை காவல் துறையினர் வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்தார்கள். ஆசிரியர்கள், `ஆம்புலன்ஸ் வருகிறது வழிவிடுங்கள்’ என்று சக ஆசிரியர்களை ஒதுங்கச் சொல்லியும், காவல்துறையினர் வைத்திருந்த இரும்புத் தடுப்புகளைத் தூக்கி ஓரமாக வைத்தும், ஆம்புலன்ஸ் செல்லுவதற்கு வழி விட்டார்கள். பிறகு, சில கோஷங்கள் போட்டுவிட்டு வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏறி  மண்டபங்களுக்குச் சென்றார்கள்.

இதுபற்றி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், ''இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் போராட உரிமை உண்டு. அரசும், காவல் துறையும் ஜனநாயகப் போராட்டத்தை மதிக்க வேண்டும். சேலம் காவல் துறையினர் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் கூட்டத்திற்குள் ஆளில்லா அம்புலன்ஸை அனுப்பி, எங்களை கேவலப்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் தமிழக காவல் துறையின் பண்பா'' என்றார்.