Published:Updated:

வேலூர் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் முந்திய போலீஸ் - தி.மு.க நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட ஸ்டாலின்!

வேலூர் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் முந்திய போலீஸ் - தி.மு.க நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட ஸ்டாலின்!
வேலூர் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் முந்திய போலீஸ் - தி.மு.க நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட ஸ்டாலின்!

வேலூரில், ஜாக்டோ - ஜியோ போராட்டக் களத்துக்கு மு.க.ஸ்டாலின் வருவதையறிந்த போலீஸார், முன்கூட்டியே சுதாரித்துக்கொண்டு, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் அத்தனை பேரையும் கைதுசெய்து அழைத்துச்சென்றுவிட்டனர். இதையறியாமல், போராட்டக் களத்திற்கு தன்னை அழைத்துவந்த தி.மு.க நிர்வாகிகளை, ஸ்டாலின் கடிந்துகொண்டார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில், கடந்த 22 -ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகிலும் தொடர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். 28 -ம் தேதி காலையும் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 1500 பேர், கலெக்டர் அலுவலகம் அருகே குவிந்து, தமிழக அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

இதனிடையே, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சீவூரில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 28 -ம் தேதி மதியம் வேலூர் வந்தார். ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, கலெக்டர் அலுவலகப் பகுதிக்கு ஸ்டாலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையறிந்த போலீஸார், உடனடியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் அவசர அவசரமாகக் கைதுசெய்து, பேருந்துகளில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதையறியாமல், போராட்டக் களத்துக்கு ஸ்டாலின் வந்தார். அப்போது, அங்கு யாரும் இல்லாததால் அவர் ஏமாற்றமடைந்தார். கலெக்டர் அலுவலக மேம்பாலத்திற்கு அடியில் காரில் சுற்றிப் பார்த்தபடி, அருகே உள்ள தி.மு.க மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு ஸ்டாலின் சென்றுவிட்டார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீஸார் கூண்டோடு கைதுசெய்து அழைத்துச்சென்றதை அறியாமல் தன்னை, அங்கு அழைத்துச்சென்றது ஏன் என்று கேட்டு தி.மு.க நிர்வாகிகளை ஸ்டாலின் கடிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.