Published:Updated:

சேவையை ரத்து செய்வது நியாயமா?- திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு எதிராகப் போராட்ட எச்சரிக்கை

சேவையை ரத்து செய்வது நியாயமா?- திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு எதிராகப் போராட்ட எச்சரிக்கை
சேவையை ரத்து செய்வது நியாயமா?- திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு எதிராகப் போராட்ட எச்சரிக்கை

`தென்னக ரயில்வேயின் திருச்சிக் கோட்ட நிர்வாகம் தொடர்ந்து மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக குடந்தை அனைத்துத் தொழில் வணிகக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சத்தியநாராயணனிடம்  பேசிய போது, ``மயிலாடுதுறையிலிருந்து திருநெல்வேலிக்கு (56821-22) தினசரி பாசஞ்சர் ரயில் பகல் நேரத்தில் இருமார்க்கத்திலும் இயங்கப்பட்டு வந்தது. இதனால் மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் மேற்படி ரயிலை `தஞ்சை - திருச்சி இடையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால் ரத்து செய்யப்படுகிறது' என உண்மைக்குப் புறம்பான காரணத்தைக் காட்டி பல மாதங்களாக ரத்து செய்து விட்டனர். ரயில்வே நிர்வாகத்துக்கு நாம் முன் வைக்கும் கேள்வி என்னவெனில், தஞ்சை-  திருச்சி இடையே அனைத்து ரயில்களும் இயக்கப்படும் போது குறிப்பாக திருநெல்வேலி ரயிலை மட்டும் தொடர்ந்து முடக்கிவைப்பது ஏன். அடுத்து பராமரிப்பு பணிதான் உண்மையான காரணமென்றால் ரயிலை இயக்குகின்ற நேரத்தை மாற்றி அமைக்கலாமே. எதற்காக ரத்து செய்ய வேண்டும்.

மக்களுக்குப் பயனுள்ள வகையில் இயங்கி வரும் ரயிலை எப்படியாவது இயக்க வேண்டும் என எண்ணாமல் சேவையை ரத்து செய்வது எந்தவிதத்தில் நியாயம். மேலும் இதன் தொடர்ச்சியாக திருச்சியிலிருந்து, மயிலாடுதுறைக்கு தினசரி காலை 7 மணிக்கு இயக்கப்படும் (56824) பாசஞ்சர் ரயில் கும்பகோணத்துடன் நிறுத்தப்பட்டு 2 மணி நேரம் கழித்து, வெறும் வண்டியாக அதாவது பயணிகள் இல்லாமல் மயிலாடுதுறைக்குக் கொண்டு செல்லப்படுவது ஏன். இது ஒரு புறமிருக்க தாம்பரம் - செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத, முழுவதும் பொதுப்பெட்டிகளை உடைய, அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்தது. இதற்கான கால அட்டவணையில், இயக்க நேரம் மற்றும் நிறுத்தங்களின் விவரம் போன்றவை இரண்டுமுறை வெளியிடப்பட்டன. ஆனால் இரண்டு ஆண்டுகளாக ரயிலை இயக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது ரயில்வே நிர்வாகம். இது போன்ற ஒரு அவலநிலை ரயில்வே நிர்வாகத்தில் இதுவரை இருந்தில்லை.

எனவே ரயில் சேவை என்பது மக்களுக்கான உரிமை. மாநில அரசு பேருந்துக் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தியதன் விளைவாக, பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகம் நாடுகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் ரயில்வேதுறையும் மக்களுக்கான சேவையை வழங்க மறுப்பது முறையல்ல. இப்பிரச்னைகள் குறித்து பலமுறை தபால் மூலமும், நேரிலும் மனு அளித்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டும் பயனில்லை. ஆகவே இனி போராடிப் பெறவேண்டிய சூழ்நிலைக்கு அரசுகள் தள்ளுகின்றன. அதற்கு இடம் தராமல் திருச்சி ரயில்வே கோட்டம் உடனே செயல்படவேண்டும்" என்றார்.

படம்: பா.பிரசன்னா