Published:Updated:

`நீங்கதான் விவசாயிகளைக் காப்பாத்தணும்!' - காந்தி சிலையிடம் மனுகொடுத்த போராட்டக்காரர்கள்

`நீங்கதான் விவசாயிகளைக் காப்பாத்தணும்!' - காந்தி சிலையிடம் மனுகொடுத்த போராட்டக்காரர்கள்
`நீங்கதான் விவசாயிகளைக் காப்பாத்தணும்!' - காந்தி சிலையிடம் மனுகொடுத்த போராட்டக்காரர்கள்

" 'இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்'னு நீங்க சொன்னீங்க. ஆனா, மத்திய, மாநில அரசுகள் அந்த முதுகெலும்பை உடைச்சுட்டாங்க. அதனால், விவசாயிகளை விண்ணில் இருந்தாவது எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று காந்தி சிலையிடம் கரூர் மாவட்ட காங்கிரஸார் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி சார்பில், கரூர் கடைவீதி காமராஜர் சிலை தொடங்கி, லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை வரை பேரணியாகச் சென்று, தேசப்பிதா காந்தியடிகள் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் விவசாய அணியைச் சேர்ந்த  நிர்வாகிகள், காந்தி சிலைக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் பங்கேற்றனர்.

காந்தி சிலையிடம் கொடுக்கப்பட்ட மனுவில், 'தேசத் தந்தை காந்தியடிகளுக்கு விவசாயிகளின் கோரிக்கை. அண்ணல் காந்திஜி அவர்களே, நீங்கள் சொன்னீர்கள், இந்த பாரத தேசத்தின் முதுகெலும்பு விவசாயிகள்தான். ஆனால், இந்த தேசத்தை ஆளுகின்ற மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளின் முதுகெலும்பை உடைத்துவிட்டார்கள். விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை இல்லை. விவசாயக் கடன்கள் ரத்துசெய்யப்படவில்லை. விவசாயத்துக்கு போதிய தண்ணீர் இல்லை. வருணபகவான் தரும் நீரைக்கூட சேமிக்க வழியில்லாத அரசுகளிடமிருந்து எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படவில்லை. பல ஏரிகள் மூடப்பட்டு, வீட்டு மனைகள் உருவாகியுள்ளன. பலநூறு விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டார்கள். அண்ணலே, விண்ணில் இருந்தாவது எங்களைக் காப்பாற்றுங்கள். எங்களது கோரிக்கையை நீங்களாவது நிறைவேற்றுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும்,முன்னாள் மாவட்டத் தலைவருமான பேங்க் சுப்பிரமணியம் கூறுகையில்,  "இன்றைய மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் நலனில் அக்கறைகொள்ளவில்லை. அவர்களைக் கண்டிக்கும் விதமாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. மத்தியில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து, விவசாயிகளுடைய நலனில் அக்கறைசெலுத்தும். அதற்காக, மகாத்மாவின் நினைவுநாளை ஒட்டி, அவரது சிலை முன்பு விவசாயிகளின் அல்லல் பற்றிய விசயங்களைக் கோரிக்கை மனுவாக வைத்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினோம். காந்தி சிலை பராமரிப்பின்றி, தூசி படிந்து இருந்தது. அதனால், அவரது சிலையைத் தண்ணீர் விட்டு முதலில் கழுவியதோடு, பிறகு பால் ஊற்றியும் அவரது சிலையை சுத்தப்படுத்தினோம்" என்றார்.