Published:Updated:

`எப்பவும் மாணவர்கள் கூடத்தான் பயணிச்சிட்டு இருப்பேன்!’ - ஜாமீனில் வந்த ஆசிரியர் உருக்கம்

`எப்பவும் மாணவர்கள் கூடத்தான் பயணிச்சிட்டு இருப்பேன்!’ - ஜாமீனில் வந்த ஆசிரியர் உருக்கம்
`எப்பவும் மாணவர்கள் கூடத்தான் பயணிச்சிட்டு இருப்பேன்!’ - ஜாமீனில் வந்த ஆசிரியர் உருக்கம்

`ஜாக்டோ-ஜியோ’ உயர்மட்டக் குழு கூட்டத்தில், போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் செல்வ சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிக்கக்கோரி சமூக வலைதளங்களில் வைரலாகச் செய்திகள் பரவி வந்தன. தற்போது பெயிலில் வெளிவந்திருக்கும் ஆசிரியர் செல்வ சிதம்பரத்திடம் பேசினோம்.

``2004-ல் ஆசிரியரானேன். எனக்கு ஓய்வூதியம் கிடையாது. அதற்குப் பதிலாக எங்களுடைய சம்பளத்திலிருந்து 10 சதவிகிதமும் அதற்கு அரசாங்கம் கொடுக்கிற வட்டியும்தான் ஓய்வூதியமாக அறிவிக்கப்பட்டது. ஓய்வூதியம் தொடர்பா தெளிவான வரையறை இல்லை. அதனால், பழைய ஓய்வூதியத்தை எங்களுக்கும் கொடுக்கச் சொல்லி கோரிக்கை விடுத்தோம். எல்லா ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம். கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும்போது காவல்துறையினர் கைது பண்ணாங்க.

ஆறு ஆண்டுகளாகத் தேசிய அறிவியல் நடத்தக்கூடிய இளம் விஞ்ஞானிகள் போட்டியில் என்னுடைய மாணவர்கள் தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெற்றும் வருகிறார்கள். அவங்களை நான்தான் வழிநடத்திட்டு இருக்கேன். நான் எப்பவும் மாணவர்கள்கூடத்தான் பயணிச்சிட்டு இருப்பேன். இந்தப் போராட்டம் மாணவர்களை பாதிக்குங்குறதுல மாற்றுக் கருத்து இல்லை. முன்னாடியே போராட்டத்தை அறிவிச்சிருந்தாங்க. அரசுக்கு அவகாசம் கொடுங்கன்னு கோர்ட் சொன்னதைக் கேட்டுத்தான் அவங்க போராட்டத்தைத் தள்ளி வைச்சிருக்காங்க. ஆனா, அது சரியா மாணவர்களுடைய தேர்வு சமயத்தையொட்டி வரும்னு யாரும் எதிர்பார்க்கலை. வேணும்னே எந்த ஆசிரியர்களும் இந்த முடிவை எடுக்கவில்லை.

கஜா புயல் பாதிக்கப்பட்ட போது, எங்க மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிச்சிருந்தாங்க. அந்தச் சமயத்தில் எங்க பள்ளிக்கு நண்பர்கள் மூலமா கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் புராஜெக்ட்ஸ் பண்ணிருக்கேன். விடுமுறை பார்த்து நான் வேலை பார்க்க மாட்டேன். என்கிட்ட படிச்ச மாணவர்கள் நான்கு பேருடைய வீடு கஜாவினால் இடிஞ்சிடுச்சு. அவங்களுக்கு என் நண்பர்கள்கிட்ட உதவிகள் வாங்கி நான்கு பேருக்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கேன். மாணவர்கள் மீது எனக்கு அதிக அக்கறை உண்டு.

2018-ல் தமிழக அரசு சார்பாக எனக்குக் கனவு ஆசிரியர் கொடுத்தாங்க. அதில் கிடைத்த பணத்தைக்கூட மாணவர்களுடைய கழிப்பறை வசதிக்காகக் கொடுத்துட்டேன். ஓர் ஆசிரியரா என் வேலையை நான் எப்பவும் சரியாகத்தான் செய்றேன். நியாயமான எங்க கோரிக்கைகளை நிச்சயம் அரசாங்கத்துல புரிஞ்சுப்பாங்கன்னு நம்புறோம்'' என்றார்.