Published:Updated:

`மக்களுக்குப் பயன் இல்லாத என்எல்சி நிறுவனம் தேவையே இல்லை!' -தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆவேசம்

`மக்களுக்குப் பயன் இல்லாத என்எல்சி நிறுவனம் தேவையே இல்லை!' -தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆவேசம்
`மக்களுக்குப் பயன் இல்லாத என்எல்சி நிறுவனம் தேவையே இல்லை!' -தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆவேசம்

``எங்கள் மக்களுக்குப் பயன் இல்லாத இந்த என்.எல்.சி நிறுவனம் தேவை இல்லை'' என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காட்டமாகக் கூறினார்.

என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். பொது மக்களின் கடும் எதிர்ப்புக்குக் காரணம் என்.எல்.சி நிறுவனம் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதம்தான் என்று கூறப்படுகிறது.

என்.எல்.சி நிறுவனம், கடந்த காலங்களில் நிலம் கையகப்படுத்தியபோது, உரிய இழப்பீடு, மாற்று இடம், மாற்று மனை என எதையும் முறையாக வழங்கவில்லை எனக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் மூதாதையர்கள் முதல், பிறந்து வளர்ந்து, வாழ்ந்த வீட்டையும், நிலத்தையும் என்.எல்.சி-க்கு வழங்கிவிட்டு, உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு என ஏதும் இல்லாமல் வேறு ஊரில் அகதிகள் போல வறுமையில் வாழவேண்டிய நிலை உள்ளதாகக் கூறி, அதனால் இதுவரை ஏமாந்தது போதும், இனி ஏமாற மாட்டோம் எனக் கூறி, கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் கிழக்கு மாவட்ட  தி.மு.க சார்பில், என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்கப்படுவதை முற்றிலும் நிறுத்தக் கோரி கம்மாபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தலைமைதாங்கினார். புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ சரவணன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான தி.மு.க-வினர், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்த உள்ள கம்மாபுரம், ஓட்டிமேடு, கொளப்பாக்கம், அரசக்குழி, விளக்கப்பாடி, பெருந்துறை, அகரஆலம்பாடி உட்பட 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில், ``இப்பகுதியில் உள்ள 40 கிராமங்களில் 13,500 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.  இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டு மொத்தமாகக் காலிசெய்யும் நிலை உள்ளது. இப்பகுதி மக்கள், தங்கள் நிலங்களையும் உடைமையையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். கிராம மக்களின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து, கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க போராடத் தயாராக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்துள்ளோம். என்.எல்.சி நிறுவனத்தால் இப்பகுதி மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. வேலை வாய்ப்பு போன்ற எதிலும் இப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை.

லாபம் ஈட்டுகின்ற இந்த நிறுவனம்,  சமூகப் பொறுப்புணர்வு நிதியைக்கூட  மற்ற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செலவு செய்கிறது. அதிகமான இயக்குநர்கள், சேர்மன் என அனைவரும் வட மாநிலத்தவர்கள்தான் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர் சேர்மனாக வந்தால், இப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வாய்ப்பு, நிலம் கொடுத்தவர்களுக்குச் சலுகைகள் செய்வார்கள் என, ஒரு சூழ்ச்சியாக  நியமிக்கப்படுவதில்லை. எங்கள் மக்களுக்குப் பயன் இல்லாத இந்த என்.எல்.சி நிறுவனம் எங்களுக்குத் தேவை இல்லை. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் ஏராளமாக உள்ள நிலையில், இப்போது புதியதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை. தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் வகையில், மாவட்டம்தழுவிய போராட்டம் நடத்தப்படும்'' என்று கூறினார்.