Election bannerElection banner
Published:Updated:

காவல்துறையினரைக் கண்டித்து விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கலெக்டர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
கலெக்டர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைக் கடுமையாகத் தாக்கிய காவல்துறையினரைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காகக் காவல்துறையினர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து வந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேச முயன்ற நிர்மலாதேவியைத் தடுத்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர்கள் மற்றும் செய்தியாளர்களையும் கடுமையாகத் தாக்கினர். இதில் செய்தியாளர்கள் மணிகண்டனுக்கு கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. செய்தியாளர் ராமகிருஷ்ணனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. மேலும், செய்தியாளர்கள் அனைவரும் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் கேமரா, கைக்கடிகாரம் ஆகியவை உடைந்தன.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து விருதுநகர் மாவட்டப் பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத்தலைவர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் நேரு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் மற்றும் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லம் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு