Published:Updated:

`எங்களிடம் பரிவுடன் நடப்பதால் பேராசியர்கள் மீது நடவடிக்கை' - மத்திய பல்கலைகழகத்தை சுற்றும் சர்ச்சை!

`எங்களிடம் பரிவுடன் நடப்பதால் பேராசியர்கள் மீது  நடவடிக்கை' - மத்திய பல்கலைகழகத்தை சுற்றும் சர்ச்சை!
`எங்களிடம் பரிவுடன் நடப்பதால் பேராசியர்கள் மீது நடவடிக்கை' - மத்திய பல்கலைகழகத்தை சுற்றும் சர்ச்சை!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முன்னறிவிப்பின்றி இரண்டு பேராசிரியர்களை பணி நீக்கம் செய்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

திருவாரூரில் இயங்கி வரும் இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 8 ம் தேதி எந்த ஒரு முன்னறிப்புமின்றி ஆங்கில துறையிலிருந்து ஆழி அரசி மற்றும் சரண்யா என்ற இரண்டு தற்காலிக பேராசிரியைகளை பணி நீக்கம் செய்தது பல்கலைக்கழக நிர்வாகம். இரண்டு பேராசிரியைகளும் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் பாதுகாவலராகவும் பணியாற்றி வந்த நிலையில் , பணிக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகும் தற்காலிக பேராசிரியைகளாகிய இருவரையும் பணி நீக்கம் செய்த செய்தியை அறிந்த மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பல்கலைக்கழக மாணவர்கள், இது குறித்து மத்திய பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் கேட்டபோது, "பேராசிரியைகள் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் தகாத வார்த்தைகளால் உரையாடியதால், நிர்வாகத்தினர் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக" கூறியுள்ளார்.

ஆனால், "பணி நீக்கம் செய்யப்பட்ட இருவரும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கும், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவது நிர்வாகத்தினருக்குப் பிடிக்கவில்லை. இருவரும் மாணவர்களிடம் கெடுபிடி காட்டாத பேராசிரியைகள் என்பதால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு பேராசிரியைகள் மீது குற்றம் சாடும் அளவிற்கு எந்த ஒரு அவப்பெயரும் இல்லை" என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், இரு பேராசிரியைகளை உடனடியாக பணி அமர்த்த வேண்டியும் , நேற்று மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். 30 மணி நேரத் தொடர் உண்ணாவிரதம் இருந்ததால் மாலை முதுகலை மாணவி ஒருவர் மயக்கமடைந்தார். 

மயக்கமடைந்த மாணவியைப் பல்கலைக்கழக முதலுதவி மையத்திற்கு அழைத்துச் சென்றும், அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடவடிக்கையைத் திரும்ப பெற்றால் மட்டுமே மருத்துவ உதவி எடுத்துக் கொள்வதாக பிடிவாதம் பிடிக்க தொடங்கிவிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் கூறும்போது, கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களுக்கு எதிராக சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததாகவும், மாணவர்களின் நலன் கருதி இரு பேராசிரியைகளும் செயல்பட்டதால் தான் இந்த நடவடிக்கையை நிர்வாகத்தினர் எடுத்ததாகவும் குற்றம் சாட்டினர். மேலும், தற்காலிக பேராசிரியைகளுக்கு தான் இந்த நிலைமை, நிரந்தர பேராசிரியர்கள் பலர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்கள் மீது நிர்வாகத்தினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினர்.  பருவதேர்வுகள் நடைபெற இருக்கும் இந்த நேரத்தில் பேராசிரியைகள் பணி நீக்கம் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்றும், நிர்வாகத்தின் இந்த செயல் அநீதிகளுக்குக் குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஒடுக்கும் செயல் என்றும் தெரிவித்தனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட இரு பேராசிரியைகளையும் மீண்டும் பணி அமர்த்தும் வரையில் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கும் மாணவர்களின் குரலுக்கு இதுவரை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் செவி சாய்க்கவில்லை. மாணவர்களின் நலன் கருதி மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தினர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் புவனேஸ்வரி யிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில், ``சரண்யா மற்றும் ஆசிஆராசி ஆகியோர் ஆங்கிலத் துறை பேராசிரியர்களாக ஒப்பந்தப் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பெண்கள் விடுதியின் பாதுகாவலராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் இந்த இரண்டு பேராசிரியைகளும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதால் நிர்வாகத்தினரால் கண்டிக்கப்பட்டனர். இதையடுத்து தலைமை வார்டனுக்கு எதிரான அவதூறான அறிக்கைகளையும் பயன்படுத்தினர்.

இந்த சிக்கலை தீர்க்க பதிவாளர் இரண்டு பேராசிரியர்களுடனான ஒரு கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது, அதில் இரண்டு ஒப்பந்த ஆசிரியர்களும் தங்கள் கட்டுப்பாட்டை மீறி தலைமை வார்டன் மற்றும் பிற உயரதிகாரிகளை பற்றி அவதூறு பேசினர். எனவே, அதிகாரிகள் மீது தவறான நடத்தை காரணமாக ஒப்பந்த விதிகளின் படி அவர்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, களத்தில் உள்ள மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க தூண்டப்பட்டனர் என்பதை நாங்கள் அறிவோம். மத்திய பல்கலைக்கழக பதிவாளர், டீன் (மாணவர் நலன்) மற்றும் அனைத்து துறைகளின் துறைத்தலைவர்கள், மாணவர்களுடனான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இரண்டு முக்கிய ஆசிரியர்களை அகற்றுவதே அவர்களின் படிப்பினையை பாதிக்கும் என்பதால், ஒரு மாற்று ஆசிரியர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.