Published:Updated:

`நீதியைப் பிணைத்துள்ள இரும்புச் சங்கிலி உடையட்டும்!'- மனிதச் சங்கிலிக்கு அழைப்புவிடுத்த அற்புதம்மாள்

`நீதியைப் பிணைத்துள்ள இரும்புச் சங்கிலி உடையட்டும்!'- மனிதச் சங்கிலிக்கு அழைப்புவிடுத்த அற்புதம்மாள்
`நீதியைப் பிணைத்துள்ள இரும்புச் சங்கிலி உடையட்டும்!'- மனிதச் சங்கிலிக்கு அழைப்புவிடுத்த அற்புதம்மாள்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``எனது மகன் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் வழக்கில், விடுதலையில் என்ன நடந்து வருகிறது என்பதைப் பொதுமக்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். பறிக்கப்பட்ட நீதியை இந்த இறுதிநிலையிலாவது மீட்டுவிட வேண்டும் என்று நானும் எனது சக்திக்கு மீறிப் போராடி வருகிறேன். அதற்குக் கட்சி, சாதி, மதங்களைக் கடந்து இன்னும் சொல்லப்போனால் பிற மாநில மக்களும் அளிக்கும் தார்மிக ஆதரவே எனது பலமாக இருந்து வருகிறது. எனது மகன் நிரபராதி என்று நான் தொடர்ந்து கூறி வந்த போதும் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த ஐ.பி.எஸ் அதிகாரியான தியாகராஜன், அறிவின் ஒப்புதல் வாக்குமூலத்தை நான் முழுமையாகப் பதிவு செய்யத் தவறிவிட்டேன் பேரறிவாளன் நிரபராதி எனக் கடந்த 2013-ம் ஆண்டு அவர் கூறியபோதுதான், பெரும்பான்மைச் சமூகம் எனது போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டது.

எழுவரும் ஏறத்தாழ 28 ஆண்டுகள் சிறைக்கொடுமையை அனுபவித்துவிட்டனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு அவர்கள் அனுபவிக்கும் தண்டனையானது மகாத்மா காந்தியின் கொலை வழக்கு போன்ற பல்வேறு எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் அதிகப்படியானது. சிறைகள் சீர்திருத்தம் செய்யவே அன்றி பழிவாங்கும் இடமல்ல. நன்னடத்தையுடன் சிறை நாள்களைக் கழித்துள்ள இவர்கள் பிற சிறைவாசிகளைப் போன்றே விடுதலைக்குத் தகுதியுடையவர்கள். தொடக்கம் முதலே பல்வேறு குளறுபடிகளைக் கொண்டது இவ்வழக்கு. ஐ.பி.எஸ் அதிகாரி தனது தவற்றை ஒப்புக்கொண்ட பின், தீர்ப்பளித்த நீதிபதி தாமஸ் “பிழையான தீர்ப்பு” எனச் சொன்ன பின் நிரபராதிகள் சிறையில் இருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

எனக்கு 71 வயது ஆகிவிட்டது. வாழ்வின் இறுதிக் காலத்திலாவது எனது பிள்ளைக்கு ஒரு நீதி கிடைத்துவிடாதா என ஏக்கத்தோடு இந்த மக்களை நம்பி எனது அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். இதுவரை தென் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் அவர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு இணங்கவும் மனிதச் சங்கிலி அறவழி போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கிறேன்.

அதன்படி மார்ச் 9-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், புதுவை ஆகிய 7 இடங்களில் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள மக்களின் ஆதரவோடு மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் சாதி, மதம், கட்சி பாகுபாடு கடந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறேன். உங்களின் 2 மணி நேரப் பங்களிப்பு 28 ஆண்டுக்கால அநீதிக்கு முடிவு கட்டட்டும். தமிழக மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் அமைச்சரவை எடுத்த முடிவினை ஏற்று ஆளுநர் விடுதலைக் கோப்பில் கையொப்பமிட துணை நிற்கட்டும். மனிதச் சங்கிலி 28 ஆண்டுகாலமாக நீதியைப் பிணைந்துள்ள இரும்புச் சங்கிலியை நொறுக்கட்டும். என்றார்.