Published:Updated:

`லஞ்சம் வாங்காம சான்றிதழ் கொடுக்கணும்' - கரூரில் வி.ஏ.ஓ-வுக்கு எதிராக எருமையிடம் மனு கொடுத்த விவசாயிகள்!

`லஞ்சம் வாங்காம சான்றிதழ் கொடுக்கணும்' - கரூரில் வி.ஏ.ஓ-வுக்கு எதிராக எருமையிடம் மனு கொடுத்த விவசாயிகள்!
`லஞ்சம் வாங்காம சான்றிதழ் கொடுக்கணும்' - கரூரில் வி.ஏ.ஓ-வுக்கு எதிராக எருமையிடம் மனு கொடுத்த விவசாயிகள்!

`லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி பலதடவை உயரதிகாரிகளுக்குப் புகார் அளித்தோம். நடவடிக்கை இல்லை. அதனால், எருமையிடம், மனுக் கொடுக்கிறோம்' என்றபடி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வித்தியாசமாகப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது பழைய ஜெயங்கொண்டம். இந்தக் கிராமத்தின் நிர்வாக அலுவலராக பாஸ்கர் ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்தான் பொதுமக்களிடம் எல்லா சான்றுகளுக்கும் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு எதிரிலேயே எருமையிடம் மனுக் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். எருமையை அலங்கரித்து, அதன் உடம்பில் வி.ஏ.ஓ பாஸ்கர் ராஜ் என்று எழுதிய பேப்பரை கட்டிவிட்டிருந்தனர். அதோடு, வி.ஏ.ஓ மீதான புகார் மனுவை அந்த எருமையிடம் நீட்டி,  `லஞ்சம் வாங்காமல் சான்றிதழ் கொடு' என்றபடி, மனுவைக் கொடுத்தனர். இந்தப் போராட்டத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வன் தலைமையேற்று நடத்தினார். 



 

அவர் நம்மிடம் கூறுகையில், ``பழைய ஜெயங்கொண்டம் பகுதியே மிகவும் பின்தங்கிய பகுதி. இங்கு வசிக்கும் முக்கால்வாசி மக்கள் எல்லோரும் கூலி வேலைக்குப் போய், அன்றாடம் பிழைப்பை பார்ப்பவர்கள். ஆனால், இந்த வி.ஏ.ஓ பாஸ்கர் ராஜ் இங்கு பணிக்கு வந்த நாளில் இருந்து மக்கள் எந்த சான்று கேட்டுப் போனாலும், 500-ல் இருந்து பத்தாயிரம் வரை லஞ்சம் கேட்கிறார். நாங்கள் பலதடவை அவரிடம் எச்சரிக்கை செஞ்சோம்.

அவர் திருந்தல. ஒரு சாதாரண ஏழைகிட்ட, ஒரு சான்றிதழ் கொடுக்கப் பத்தாயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். உடனே, வி.ஏ.ஓவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி தாசில்தார், கோட்டாட்சியர்னு பலர்கிட்டயும் மனு கொடுத்தோம். 

ஆனா, யாரும் அவர்மீது நடவடிக்கை எடுக்கலை. மாறாக, 'உங்களால என்னை ஒண்ணும் செய்ய முடியாது'ன்னு நக்கலா சிரிச்சார் வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ மீது நடவடிக்கை எடுக்காமல், எருமைமாட்டில் மழை பெய்த கணக்காக உயரதிகாரிகள் இருக்காங்க. அதனால்தான், எருமை மாட்டை வி.ஏ.ஓ.வாக சித்திரித்து, அந்த எருமை மாட்டிடம், `லஞ்சம் வாங்காம சான்றிதழ் கொடு'னு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினோம்.

இதற்கு பிறகாவது, வி.ஏ.ஓ திருந்தணும். இல்லைன்னா உயரதிகாரிகள் வி.ஏ.ஓ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா, அடுத்தடுத்து இதுபோல் பல அதிரடியான போராட்டங்களை நடத்துவோம்" என்றார் ஆக்ரோஷமாக!

வி.ஏ.ஓ பாஸ்கர் ராஜ் தரப்பில் பேசினோம், ``யாரிடமும் வி.ஏ.ஓ லஞ்சம் கேட்கலை. ஏன் வி.ஏ.ஓ-வுக்கு எதிராக இப்படிப் போராட்டம் நடத்துறாங்கன்னு புரியலை. இதுக்கெல்லாம் வி.ஏ.ஓ அசரமாட்டார்" என்றார்கள்.