Published:Updated:

மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?

மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?

மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?

மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?

மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?

Published:Updated:
மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயிலின் சேவையில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, நகர மக்களைக் கவலையில் ஆழ்த்தி விட்டது.

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்குக் கிடைத்துள்ள அமோக வரவேற்பைத் தொடர்ந்து, காலை 4.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை அதன் சேவை நேரத்தை அதிகரித்தது, மெட்ரோ ரயில் நிர்வாகம். இந்த நிலையில், நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கு இடையிலான பிரச்னையால், ஏப்ரல் 29-ம் தேதி மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நம்மிடம் பேசிய மெட்ரோ ரயில் ஊழியர்கள் சிலர், “ஸ்டேஷன் கன்ட்ரோலர், டிராஃபிக் கன்ட்ரோலர், டெக்னீஷியன்கள் உட்பட 250 நிரந்தர ஊழியர்களை 2013-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நியமித்தது. அனைவருக்கும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து, குழந்தைகள் படிப்பு, மருத்துவச் செலவு என அடிப்படை சம்பளத்துடன் 35 சதவிகிதம் அலவன்ஸ் தரப்பட்டது.

அந்த 35 சதவிகித அலவன்ஸுடன் சேர்த்து, 01-01-2017 முதல் புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்துமாறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் ஊதிய மறுசீரமைப்புக் குழு பரிந்துரைத்தது. அதையடுத்து, 10 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதேநேரம், 35 சதவிகித அலவன்ஸை ரத்துசெய்துவிட்டனர். அரை சம்பளத்துடன் கூடிய 20 நாள்கள் விடுப்பு மற்றும் குழந்தை பிறந்தால் வழங்கப்படும் 15 நாள்கள் விடுப்பு ஆகியவற்றையும் ரத்துசெய்துவிட்டனர். இதுகுறித்து முறையிட்டும், நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே நாங்கள் தொழிற்சங்கம் அமைத்தோம். அதன் பிறகு, எல்லா பணிகளையும் ‘அவுட்சோர்சிங்’ செய்ய ஆரம்பித்தனர். துப்புரவுப் பணி செய்தவர்களை, ‘ஆபரேஷன்’ பிரிவில் பணியமர்த்தினர். இதனால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. நிர்வாகத்திடம் முறையிட்டும் அதை நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை” என்றனர்.

மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?

இதுகுறித்து சி.ஐ.டி.யூ தலைவர் அ.சவுந்திரராசன், “பணிகளை அவுட்சோர்சிங் செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், மெட்ரோ ரயில் நிர்வாகம் அவுட்சோர்சிங் நடவடிக்கையில் ஈடுபட்டது. அது சட்டவிரோதம் என்று சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டருக்குக் கடிதம் எழுதினேன். அதற்காகச் சங்க நிர்வாகிகள் ஏழு பேரை நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. அதை ரத்து செய்யுமாறு வேலைநிறுத்த நோட்டீஸை ஊழியர்கள் கொடுத்தனர். சமரசப் பேச்சுவார்த்தை நடந்தபோது, ‘ஊழியர்கள் யாரையும் நிர்வாகம் வேலைநீக்கம் செய்யக் கூடாது’ என்று தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டார். அதை மீறி, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி ஏழு பேரை டிஸ்மிஸ் செய்தனர். அதனால்தான் போராட்ட வேண்டிய சூழலுக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டனர்” என்றார்.

இந்த ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ‘உடனடியாக ரயில் நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்’ என்கிற அறிவிப்பு அங்குள்ள ஸ்பீக்கர்களில் திடீரென ஒலித்தது. என்ன ஏது என்று தெரியாமல், பயணிகள் எல்லோரும் பதறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.

“அந்த சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால், அதற்கு யார் பொறுப்பு? சிக்னலை அணைத்துவிட்டுச் சென்றதாக உங்களை நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது. நீங்கள் இப்படி நடந்துகொண்டது நியாயமா?” என மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகளிடம் கேட்டோம்.

அதற்கு அவர்கள், “வேண்டுமென்றே அப்படி நாங்கள் நடந்துகொள்ளவில்லை. 30-06-2018 அன்று ஆரம்பித்த போராட்டம் இது. நியாயமே இல்லாமல் எட்டு ஊழியர்களை நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. பயணிகளின் நலன் கருதி, உடனே நாங்கள் போராட்டத்தில் இறங்கவில்லை. சட்டரீதியான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துவந்தோம். அதிலும் எங்களுக்குத் தீர்வுகிடைக்காத சூழலில்தான், போராட்டத்தில் இறங்க வேண்டியதாகிவிட்டது. ஏப்ரல் 29-ம் தேதி மதியம் 2 மணிக்கு மேலாண்மை இயக்குநரைச் சந்தித்து முறையிடச் சென்றோம். மாலை 5.30 மணிவரை எங்களை அவர் சந்திக்கவே இல்லை. அதனால் ஊழியர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு, ஸ்ட்ரைக்கில் இறங்கும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.எங்களுக்கென்று சில பணி விதிமுறைகள் உள்ளன. ஆங்காங்கே ரயில்களை நிறுத்திவிட்டு எங்களால் வந்துவிட முடியாது. ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்திவிட்டு, கதவுகளைத் திறந்துவிட்டு, முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, அதன் பிறகுதான் எல்லோரும் வந்தார்கள். அப்படிச் செய்திருக்காவிட்டால்தான், அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும். ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று பணிக்கு வரும் எங்களுக்குப் பணி வழங்க நிர்வாகம் மறுக்கிறது. அதனால் உரிய பயிற்சி இல்லாத ஆபரேட்டர்களை வைத்துதான் ரயில்களை இயக்கிவருகிறார்கள். அதனால், பாதுகாப்பு இல்லாமல்தான் இப்போதும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு விஷயத்தில் அக்கறையின்றி செயல்படுவது நாங்களா... நிர்வாகமா?” என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்?

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சீனியர் அதிகாரி ஒருவர், “ஆபரேஷனில் இருந்த 240 பேர் ஸ்ட்ரைக்கில் பங்கேற்றனர். ஆனாலும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டோம். உரிய பயிற்சிகளைப் பெற்றவர்களே, அவுட்சோர்சிங் முறையில் ‘ஆபரேஷன்’ பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எந்தவித பாதுகாப்புக் குறைபாடும் இல்லை” என்றார்.

“ஆயிரம்தான் சொன்னாலும் அன்றைய தினம் பொதுமக்களின் உயிரோடுதான் ஊழியர்களும், மெட்ரோ நிர்வாகமும் விளையாடினர். திருமங்கலம் ரயில் நிலையத்தில் இறங்கியபோது, ‘அவசர அறிவிப்பு உடனடியாக அனைத்துப் பயணிகளும் நிலையத்தைவிட்டு வெளியேறுங்கள்’ என்று அபாய அறிவிப்பு ஒலித்தது. அதைக் கேட்டதும் உயிர்போய் உயிர் வந்தது. ஊழியர்களின் போராட்ட முறையும் தவறு. அதை மெட் ரோ நிர்வாகம் கையாண்ட விதமும் தவறு. அவர்கள் வீதியில் நின்று போராடியிருக்கவேண்டும். அதேபோல, ரயில் சேவையை முழுமையாக நிறுத்தியிருக்க வேண்டும் நிர்வாகம். அதைவிடுத்து இப்படி எங்களின் உயிர்களோடு விளையாடிப் பார்த்தது மன்னிக்கமுடியாத குற்றம்’’ என்று பொங்குகிறார்கள் தினமும் மெட்ரோவில் பயணிப்பவர்கள்.

- ஆ.பழனியப்பன்
படங்கள்: தி.ஹரிஹரன், வி.ஸ்ரீனிவாசலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism