Published:Updated:

`எங்க பிள்ளைகளும் பாம்பு பிடிக்கத்தான் போகணுமா?’ - பழங்குடியினர் ஆதங்கம்

`எங்க பிள்ளைகளும் பாம்பு பிடிக்கத்தான் போகணுமா?’ - பழங்குடியினர் ஆதங்கம்
`எங்க பிள்ளைகளும் பாம்பு பிடிக்கத்தான் போகணுமா?’ - பழங்குடியினர் ஆதங்கம்

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டியில் காட்டுநாயக்கன் என்ற பெயரில் பழங்குடி இனப் பட்டியலில் சாதிச்சான்றிதழ் கொடுக்கும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியில் காட்டுநாயக்கன் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். பல்லாண்டுகளாக இவர்கள் குறி சொல்லுதல், வேட்டையாடுதல், பாம்பு பிடித்தல் போன்ற தொழில்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இன்றைய தலைமுறை குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வருகின்றனர். கல்விக்கு சாதிதான் தடையாக இருக்கும் என நினைத்தால் இவர்களுக்கோ சாதிச் சான்றிதழ் தடையாக உள்ளது.

சாதிச் சான்றிதழ் இல்லாத மக்களுக்கு 2010-ம் ஆண்டிலிருந்துதான் காட்டுநாயக்கன் என்ற பெயரில் பழங்குடியினர் இனத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுவும் 7 ஆண்டுகள் மட்டும்தான் நீடித்தது. 2017-ம் ஆண்டுக்குப் பின் யாருக்கும் சாதிச் சான்றிதழே வழங்கப்படவில்லை. சாதிச் சான்றிதழும் இல்லை, பிள்ளைகளுக்கு வேலையும் இல்லை. அப்புறம் ஏன் படிக்க வைக்கணும். படிச்சது போதும். எங்க பிள்ளைகளைப் பேசாம எங்களோட குலத்தொழிலுக்கே அனுப்பிடறோம் எனக் கூறி, சுமார் 150 குழந்தைகளைப் படிக்க அனுப்பாமல் பெற்றோர்கள் நேற்று பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டனர். இதனால் சின்னமூப்பன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாதிக்கும் மேல் குழந்தைகள் இல்லாமல் பள்ளி வெறிச்சோடிக் காணப்பட்டது.

நாடோடியா சுத்திக்கிட்டு திரிஞ்ச எங்கள, ``நீங்களும் மத்தவங்க மாதிரி வாழணும்னு’ சொல்லி 1963-ம் ஆண்டு முதல்வர் காமராஜர்தான் இடம், நிலம் கொடுத்து எங்களை இங்கேயே தங்க வெச்சார். இப்போ எங்க பிள்ளைகளை எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறோம். நல்லாதான் படிக்கிறாங்க. ஆனால், என்ன செய்ய... படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு அனுப்பலாம்னு பார்த்தா சாதிச் சான்றிதழ் இல்லையே! இப்போ படிச்ச படிப்புக்கு வேலையும் இல்லாம குலத்தொழிலும் தெரியாம திரியறாங்க. நாங்கதான் அவங்களுக்குக் கஞ்சி ஊத்தறோம். பேசாம படிக்கவே அனுப்பாம குலத்தொழில செய்ய சொல்லியிருந்தா ஒருபடி அரிசி, கைப்பிடி சோறோடு, ஒரு நாளைக்கி குறைஞ்சது 50 ரூபாயாச்சும் சம்பாதிச்சி கொடுத்திருப்பாங்க’’ என்றார் பெரியவர் ஒருவர் ஆதங்கத்தோடு.

காளிராஜ் என்பவர் கூறும்போது, ``இப்போ எனக்கு 43 வயசு ஆகுது. கல்லூரி படிச்சு முடிச்சு 20 வருஷம் காத்திருந்த பின்னாடிதான் எனக்கு

சான்றிதழ் கிடைத்தது. படிக்கிறப்போ வாலிபால் வீரனா இருந்தேன். பல போட்டிகள் விளையாடியிருக்கேன். சான்றிதழ் மட்டும் இருந்திருந்தா நான் எப்போதோ போலீஸ் வேலைக்குப் போயிருப்பேன். ஆனால், என்னால எந்த வேலைக்கும் போக முடியல. என் பிள்ளைக்கு இதே சாதிப் பெயர்ல என்னால சான்றிதழ் வாங்க முடியல’’ என்றார் ஆதங்கத்துடன்.

ஆறுமுகம் கூறும்போது, ``ஊட்டி பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜக்கா பார்த்தசாரதி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் நளினி ஆகியோர் இங்கே வந்து எங்க ஊர் மக்களிடம் ஆய்வு செய்தனர். அதன்பேரில் இதுவரை எங்கள் ஊரில் 132 பேருக்கு காட்டுநாயக்கன் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டில்தான் எனக்கு சான்றிதழ் கிடைத்தது. இப்போ நான் வேலைக்குப் படிக்க முடியுமா; இல்லை குடும்பத்தை பார்க்க முடியுமா. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் காட்டுநாயக்கரே இல்லை எனக் கூறி இப்போது சாதிச் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர்.

அப்பாவுக்கு காட்டுநாயக்கன் பேரில் சாதிச் சான்றிதழ் உண்டு. மகனுக்கு சாதிச் சான்றிதழ் இல்லை. அண்ணனுக்கு இருக்கு. தம்பிக்கு இல்லை. ஒரு வாரம் பொறுப்போம். இல்லையென்றால் பக்கத்து பள்ளிகளில் படிக்கும் எங்கள் பிள்ளைகளையும் படிப்பைவிட்டே நிறுத்திவிடுவோம்’’ எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ச.செல்லப்பா கூறும்போது, ``விருதுநகர் மாவட்டத்தில் இந்து காட்டுநாயக்கன் சாதியினர் இல்லை. இவர்களின் பழக்கவழக்கங்கள், பொருளாதார நிலை, கல்வித்தகுதி ஆகியவை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கடிதம் அனுப்பப்படும். அதன்பின் சான்றிதழ் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.