Published:Updated:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தார்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தார்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தார்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதைக் கண்டித்து, வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் தாசில்தார்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, வருவாய்த் துறையில் பணியாற்றிவரும் தாசில்தார்களை, வேறு மாவட்டங்களுக்குப் பணிமாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதற்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதலைக் கண்டித்து, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் செய்வதற்காக, தாசில்தார்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று வந்தனர்.

வெயில் சுட்டெரித்ததால், கலெக்டர் அலுவலகத் தரைதளத்தில், முன்னேற்பாடாக நாற்காலிகளைக் கொண்டுவந்து போடச் செய்தனர். பின்னர், நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ``தாசில்தார்களின், மாவட்ட இடமாறுதல் உத்தரவைத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும். நாளையும், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, இதேபோன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

``சாமானிய மக்கள் தங்களின் உரிமைக்காக வெயில், மழை என்று பார்க்காமல் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அரசாங்க வேலையில் இருக்கும் அதிகாரிகள், இப்படி நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு போராட்டம் செய்கிறார்கள். பொதுமக்களில் 4 பேருக்கு மேல், கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தால், போலீஸார் தடுக்கின்றனர். போராட்டம் நடத்தினால் கைது செய்கின்றனர். தாசில்தார்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரைப் போராட்டத்திற்கு அனுமதித்தது எப்படி?. இது சாமானியர்களுக்கு சாத்தியமா?’’ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.