Published:Updated:

`மதுபானக்கடையை மூடுங்கள்!' - நீலகிரியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

`மதுபானக்கடையை மூடுங்கள்!' - நீலகிரியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
`மதுபானக்கடையை மூடுங்கள்!' - நீலகிரியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றக் கோரி ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் புதிதாக டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் தும்மனட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பது கைவிடப்பட்டது. தலைக்குந்தா பகுதியில் கல்லட்டி மலைபாதை தொடங்கும் இடத்தில் ஏற்கெனவே ஒரு மதுக்கடை இயங்கிவரும் நிலையில் இக்கடையை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் இல்லை. இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லட்டி மலைப்பாதையில், ஏக்குணி அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இங்கு டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வௌியானவுடன், ஏராளமான பொதுமக்கள் கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

 பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சமயத்தில் ஏக்குணிப் பகுதியில் இன்னும் கட்டி முடிக்கப்படாத கட்டடத்திற்குள் மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளைக்கொண்டு வந்து வைத்து கடை திறக்கப்பட்டது. இந்த கடை திறக்கப்பட்டதால், கல்லட்டி,  ஏக்குணி, உல்லத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி வருவதாகவும், சாலை விபத்துகள் தொடர்வதாகவும், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாகவும், மதுபான கடையை மூடக் கோரி பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஐ.,சுஜித்குமார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து ஏக்குணி டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.