Published:Updated:

இந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்!
இந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்!

இந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்!

பிரீமியம் ஸ்டோரி

மீண்டும் வெடித்திருக்கிறது ‘இந்தித்திணிப்பு’ சர்ச்சை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியும் ‘இந்தித் திணிப்பு’க்கு எதிராகக் குரல் எழுப்பியதுதான் விநோதம்.

புதிய தேசியக் கல்விக்கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய்வதற்கு கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் அளித்துள்ளது. அதில், ‘மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்’ என்கிற பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது.

இருமொழிக்கொள்கை பின்பற்றப்படும் தமிழகத்தில், மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு கொண்டுவருவதாகவும், இந்தியைத் திணிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. ‘‘தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம். தேன்கூட்டில் கல்லெறிய வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார், தி.மு.க தலைவர் ஸ்டாலின். இன்னொருபுறம், ‘இவர்களுக்கு எப்போதும் இதே வேலைதான். தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலேயே இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஏன், தி.மு.க-வினர் நடத்தும் பல பள்ளிகளிலேயே இதுதான் நிலைமை. மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் வாய்ப்புகள் விரிவடையும். திராவிடக் கட்சிகளின் இந்தி எதிர்ப்பு என்பது இரட்டை வேடம்’ என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

“ ‘மும்மொழிக் கொள்கை’ என்கிற ஒன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கிடையாது. அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும். இரண்டாவதாக இன்னொரு மொழியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது மொழியாக ஏற்கெனவே ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியையோ, வேறு மொழியோ கற்றுக்கொள்ள யாராவது விரும்பினால், நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு.

இந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்!

“கல்வியில் இந்தியைக் கொண்டுவந்துவிட்டால் அதைக் காரணமாக வைத்து, ‘இந்தியாவில் இந்திதான் ஆட்சிமொழி’ என்று நாளை சொல்வார்கள். மொழிவழித் தாயகம் என்கிற கருத்தாக்கத்தை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் இது வீண் வம்பு. பெரும் தொழில் குழுமம், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் சுரண்டலுக்கு இது தேவைப்படுகிறது. எனவே, இதைச் செய்கிறார்கள். எல்லோருக்கும் இந்தி தெரியும் என்கிற நிலை வந்துவிட்டால் ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே மொழி என, அவர்களுக்கு வசதியாகப் போய்விடும். ஒரே சந்தைக்கு ஒரே மொழி என்பது உகந்ததாகிவிடும். ஒரே விளம்பரத்தை இரண்டு மூன்று மொழிகளில் போட வேண்டியிருக்காது.

மோடி மட்டுமல்ல, லாலு வந்தாலும், ராகுல்காந்தி வந்தாலும், மாயாவதி வந்தாலும் எல்லோருக்கும் அதே பார்வைதான்” என்று கொதிக்கிறார் தியாகு.

“தமிழகத்தில் ஏற்கெனவே மொழியை வைத்து அரசியல் செய்துவிட்டார்கள். பழைய அரசியலை அவர்களால் விட முடியவில்லை. இதைச் செய்வது பி.ஜே.பி அரசு என்பதால், அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போய்விட்டது” என்று பேச ஆரம்பித்தார், பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளரான பேராசிரியர் சீனிவாசன்.

“இது கல்விக்கொள்கையின் வரைவுதான். இது நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வைக்கப்படும். அதற்கு முன்பாக, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் போகும். அங்கு விவாதங்களின் அடிப்படையில் பல திருத்தங்கள், மாற்றங்கள் செய்யப்படும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், ஆளும்கட்சியிலிருந்தும் புதிய ஆலோசனைகளைச் சொல்லலாம். அதன் பிறகு மாநிலங்களில் அமல்படுத்துவதற்கு, சட்டமன்றங்களிலும் இது விவாதத்துக்கு வரும்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் ஏற்கெனவே மும்மொழிக் கொள்கை இருக்கிறது. அங்கு எந்தப் பிரச்னையும் எழவில்லை. இந்தியைத் தாய்மொழியாகப் பேசுகிற உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில், ஏதோ ஒரு பிராந்திய மொழியை மூன்றாவதாகக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்கிறார்கள். உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழையோ, மலையாளத்தையோ, கன்னடத்தையோ மூன்றாவது மொழியாகப் பயில வேண்டும். தமிழ்நாடு மாதிரி ஏற்கெனவே இருமொழிக்கொள்கை இருக்கிற, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்காத மாநிலங்களில் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளது. இது கட்டாயம் கிடையாது என்று வரைவு அறிக்கையில் மாற்றப்பட்டுவிட்டது. இது வெறும் பரிந்துரைதான்.

இந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்!

தமிழ்நாட்டில் எல்லா சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் இந்தி இருக்கிறதா, இல்லையா? தனியார் நடத்தும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் இந்தி இருக்கிறதா, இல்லையா? தமிழ்நாட்டில் உள்ள இந்தி பிரசார சபாவில்தான் அதிகமான பேர் இந்தித்தேர்வு எழுதுகிறார்கள். எனவே, இந்தியைக் கற்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் கற்றுக்கொள்வதை நாம் ஏன் தடுக்க வேண்டும்?

மொழிரீதியாகப் பரந்துபட்ட பார்வை தேவை. உலகில் எங்கெல்லாம் பன்மொழிச் சூழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்கிற வாதம் இனி எடுபடாது. கேரளாவில் மலையாளம், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகள் உள்ளன. ஆந்திராவில் தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளன. இதனால், மலையாளமும் தெலுங்கும் அழிந்துவிடவில்லை.  தமிழ்நாட்டில் மட்டும் அழிந்துவிடும் என்பது ஏற்புடைய வாதம் இல்லை” என்கிறார் சீனிவாசன்.

விவாதங்கள் சூடுபிடித்த நிலையில், ‘இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி கட்டாயம் பயில வேண்டும்’ என்பதை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட வரைவுக்கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘விருப்பத்தின் அடிப்படையில், 3-வது மொழியை மாணவர்களே தேர்வுசெய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. மத்திய அரசின் மும்மொழிப் பரிந்துரையைத் தமிழக அரசு ஏற்காது” என்று அறிவித்துள்ளார், அமைச்சர் செங்கோட்டையன்.

மோடி அரசு பதவியேற்றதும் முதல் சர்ச்சை எட்டுவழிச்சாலை தீர்ப்பில் மேல்முறையீடு, இரண்டாவது சர்ச்சை கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை. இரண்டுமே தமிழகத்தின் கொதிநிலையை அதிகப்படுத்தியுள்ளது.

எந்த மொழிக்கொள்கையாக இருந்தாலும் அதுகுறித்த வெளிப்படையான விவாதங்களும் மக்களின் விருப்பமும்தான் முக்கியம்.

-ஆ.பழனியப்பன், ஓவியம்: ஹாசிப்கான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு