Published:Updated:

`எங்கள் ஓட்டு எங்களைக் காப்பாற்றாதபோது எங்களுக்கு எதற்கு தேர்தல்!'- கொந்தளித்த மாணவிகள்

`எங்கள் ஓட்டு எங்களைக் காப்பாற்றாதபோது எங்களுக்கு எதற்கு தேர்தல்!'- கொந்தளித்த மாணவிகள்
`எங்கள் ஓட்டு எங்களைக் காப்பாற்றாதபோது எங்களுக்கு எதற்கு தேர்தல்!'- கொந்தளித்த மாணவிகள்

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களைச் சீரழித்து, வீடியோ எடுத்தும் மிரட்டிப் பணம் பறித்த விவகாரம் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய பொள்ளாச்சியைச் சேர்ந்த இந்தக் கொடூரக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ‘பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனைச் சட்டம் பிறப்பிக்காதவரைத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை’ என்று புதுக்கோட்டை ஜே ஜே கல்லூரி மாணவிகள் கறுப்புத் துணி அணிந்து முகத்தை மூடி பதாகை அணிந்து நூதனப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் மாணவிகளில் ஒருவர், ``இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துகொண்டே வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் என்பதே இல்லை. பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை நமது நாட்டில் வழங்கப்படுவதில்லை. அதுதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம். பயம் இருந்தால் மட்டுமே குற்றங்கள் செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றும். இல்லையெனில் அதுவரை பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். சீனா, அரபு நாடுகளில் உள்ளதைப் போலவே கடுமையான தண்டனை பாலியல் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படவேண்டும். இப்போதிருக்கும் சட்டம் மற்றும் தண்டனைகளை மாற்றியமைத்தால் மட்டுமே இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வு வரும். அப்படியொரு சட்டம் நிறைவேறும் வரை நாங்கள் தேர்தல்களில் வாக்களிக்க மாட்டோம். அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம்” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கட்சி வேறுபாடின்றி கைது செய்து விரைந்து தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி வாயிலில் தொடங்கி டி.வி.எஸ் டோல்கேட் வரை பேரணியாகச் சென்றனர்.

இதில், `இருளில் தள்ளப்பட்ட பெண்களுக்கு நீதி மூலம் வெளிச்சம் கொடு', `பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருப்போம்', `இரக்கமற்ற ஈனப் பிறவிகளுக்கு இனியும் இத்தவறை செய்யாதவாறு தண்டனை கொடு', `ஒன்று சேர்வோம் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக', `துணை நிற்போம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக', `காமக்கொடூரன்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் இடு" என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் இவற்றை ஆக்ரோஷமாக மாணவர்கள் கோஷங்களாகவும்  எழுப்பினார்.

தொடர்ந்து சென்ற பேரணியை டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி அருகில் காவல்துறையினர் இடைமறித்தனர். பின்னர் கன்டோன்மென்ட் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். `தேர்தல் நேரத்தில் பேரணிக்கு யாருக்கும் அனுமதி இல்லை. மீறினால் கைது செய்வோம்' என்று எச்சரித்தனர். இதனால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையின் தடையை மீறி  மீண்டும் பேரணியைத் தொடர  முற்பட்ட மற்றும் 35 மாணவிகள் உட்பட 82 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு ஏற்பட்ட அநீதியை தயக்கமின்றி வெளிப்படுத்த அனைத்து தரப்பினரும் அதற்கு சூழலை ஏற்படுத்தி உதவ வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.தவறு இழைத்தவர்களுக்கு விரைந்து அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனை இனி யாரும் இதுபோன்ற குற்றம்  செய்ய கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும்" என்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களிலும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.