Published:Updated:

``அரசு ஆலையால விவசாயமும் போச்சு.. வீடும் போச்சு!" - புலம்பும் விவசாயிகள்

``அரசு ஆலையால விவசாயமும் போச்சு.. வீடும் போச்சு!" - புலம்பும் விவசாயிகள்
``அரசு ஆலையால விவசாயமும் போச்சு.. வீடும் போச்சு!" - புலம்பும் விவசாயிகள்

``அரசு சிமென்ட் தொழிற்சாலையால் எங்க விவசாயமும் போச்சு. தென்னை மரங்கள் ஆலைக் கழிவுகளில் மோசமாகி, எங்கள் வீடுகளில் விழுந்து, வீடுகள் சேதமாவுது" என்று புலம்பி வருகிறார்கள் சம்பந்தபட்ட பகுதி விவசாயிகள்.

கரூர் அருகே உள்ள புகளூர் காகித ஆலை நிறுவனம் மற்றும் காகித ஆலை நிறுவனத்துக்குச் சொந்தமான டி.என்.பி.எல் சிமென்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து, தொழிற்சாலைக்கு அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், தென்னை மரங்கள், குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றில் விழுவதால், சுகாதாரக் கேடும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் விவசாயப் பயிர்கள், தென்னை ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இன்று காலை தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்துக்கு முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை ஆலை நிர்வாகம் சமாதானப்படுத்தி, தமிழ்நாடு காகித ஆலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பின்னர், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு மருந்துகள் வழங்க அனுமதி அளிக்க முடியாது என ஆலை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெற்று பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கு மருந்துகள் வழங்கப்படும் என்றும், அப்பகுதியில் குடிநீர் மற்றும் வடிகால் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், ``ஆலைக் கழிவுகளை எங்கள் நிலங்களில் கொட்டுவதால், மரங்கள் சேதமாகி, எங்கள் வீடுகளின் மீது விழுந்து, வீடுகள் சேதமாகுது. விவசாயமும் பாழாகுது. காகித ஆலை நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நோய் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்கிட வேண்டும். மேலும், தேவையில்லாத குப்பைகளை குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே கொட்டுவதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கூட்டத்தில் வலியுறுத்தினோம். அவர்களும் மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். எனவே, தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது" என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு காகித ஆலை செயலாளரிடம் கேட்டபோது, ``பேரூராட்சிக்காக விலைக்கு வாங்கப்பட்ட இடத்தில் கழிவுகளைக் கொட்டி, அதை மேம்படுத்தும் பணியில் காகித ஆலை ஈடுபட்டு வருகிறது. 'தனிநபர் இடத்திலோ, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ, பேரூராட்சி சார்பில் திரட்டப்படும் குப்பைகள் கொட்டப்படுவதில்லை' என பொதுமக்களுக்கு எடுத்து விளக்கினோம். அவர்களும் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆலை நிர்வாகம் ஈடு செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அமைதியாக கலைந்து சென்றனர்" என்றார்.