Published:Updated:

கல்லூரிக்குள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டுக் கொந்தளிக்கும் மதுரை மாணவர்கள்

கல்லூரிக்குள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டுக் கொந்தளிக்கும் மதுரை மாணவர்கள்
கல்லூரிக்குள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டுக் கொந்தளிக்கும் மதுரை மாணவர்கள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் எதிரொலியாக கடந்த இரண்டு நாள்களாய் தமிழகமெங்கும் ஆங்காங்கே மாணவர் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மதுரையில் வெள்ளியன்று காலையில் சமூக அறிவியல் கல்லூரி மற்றும் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள் சிலமணிநேரம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். யாதவர் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். 

கல்லூரிக்குள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டுக் கொந்தளிக்கும் மதுரை மாணவர்கள்

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இன்னும் மறைக்கப்பட்டிருக்கின்ற உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும், அரசியல் அதிகாரப் பின்புலங்களுக்குத் துணைபோகாமல் குற்றவாளிகள்மீது வழக்கு பதிந்து கைதுசெய்து விசாரித்து அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஒருநாள் முழுவதும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். காலையில் மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக கல்லூரி வாயிலருகே திரண்டு குற்றவாளிகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட பெண்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். நிர்வாகத் தரப்பில் முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர். போராட்டத்தில் ஒரு மாணவர் பேசுகையில் ``வக்கிர புத்தியோடு பெண்களை அணுகுகிறவர்கள் திருந்தும் வகையில் இந்தக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். நம்மை ஒடுக்குகின்ற அதிகாரம், அவர்களைக் காப்பாற்றுகிறது. வருகின்ற தேர்தலின்போது இதையெல்லாம் எண்ணிப் பார்த்து சரியான நபர்களுக்கு வாக்களியுங்கள்" என்றார்.

கல்லூரிக்குள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டுக் கொந்தளிக்கும் மதுரை மாணவர்கள்

மதுரையின் ஹாட் சாலையான கோரிப்பாளையம் - தமுக்கம் சாலையில் அமைந்துள்ளது, இந்தக் கல்லூரி. இங்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய மாணவர்களால் எந்தவிதப் போக்குவரத்துச்  சிக்கலும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்குப் பாதிப்பின்றி தங்கள் எதிர்ப்பைக் காட்டிய மாணவர்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர், அவ்வழியே சாலையைக் கடந்து சென்றவர்கள். காலையிலிருந்தே கல்லூரியை முற்றுகை செய்து நின்றிருந்த காவல்துறையினர், வளாகத்தின் உள்ளே வருவதும், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதும், பின்னர் திரும்பி வாசலைவிட்டு வெளியே செல்வதுமாய் இருந்தனர். மதியமும் மாலையும் கல்லூரி வாசலில் போவோர் வருவோருக்கெல்லாம் வசதியாய் வழிசெய்து கொடுத்துப் பண்புடன் நடந்துகொண்டனர், மாணவர்கள். 

போராட்டத்தில் ஒரு மாணவி பேசுகையில், ``உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், `எனக்கென்ன' எனக் கடந்து செல்வீர்களா? அதையேன் உணர மறுக்கிறீர்கள். நீதியைக் கூட வீதியில் இறங்கிப் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. ஆனால், ஓட்டுக்கு நிதி மட்டும் வீடுதேடி வந்துவிடுகின்றது. அதைப் புறந்தள்ள வேண்டும். உங்கள் எதிர்ப்பு உணர்வுகளை ஓட்டளிக்கும்போது வெளிப்படுத்த வேண்டும்." என்றார்.

கல்லூரிக்குள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டுக் கொந்தளிக்கும் மதுரை மாணவர்கள்

மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்த முதல்வர், ``காலைமுதலே பொறுப்போடும் கண்ணியத்தோடும் உங்கள் போராட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள். உரிய அதிகாரியிடம் அனுமதிக் கடிதம் அனுப்பியுள்ளேன். அனுமதி தந்த பிறகு, உங்களது அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நானே உடன் நிற்கிறேன். இப்போது எல்லோரும் கலைந்து வீட்டுக்குச் செல்லுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் உறுதியை ஏற்றுக்கொண்ட மாணவர்கள், 'போராட்டம் தொடரும்' என அறிவித்துக் கலைந்தனர்.

மாணவர்கள் கலையத் தொடங்கியதும், மாணவர்களை வெளியேற்றிக் கொண்டிருந்த தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ஒருவரிடம் ``இந்தப் போராட்டத்தின் அடுத்து என்ன'' எனக் கேட்டபோது, ``அதெல்லாம் ஒன்றுமே இல்லை. நீங்கள் மீடியா தீனிக்காக ஆசைப்படாதீர்கள்" என்று காட்டமாகச் சொன்னார். மாணவர்களுக்கு இருக்கின்ற சமூக உணர்வுகூட ஒருசில ஆசிரியர்களுக்கு இல்லாமல்போவது எத்தனை சாபக்கேடு!