Published:Updated:

``தேர்தலைப் புறக்கணிப்போம்!’’ - சட்டவிரோத மணல்குவாரியை எதிர்க்கும் தூத்துக்குடி மக்கள்

``தேர்தலைப் புறக்கணிப்போம்!’’ - சட்டவிரோத மணல்குவாரியை எதிர்க்கும் தூத்துக்குடி மக்கள்
``தேர்தலைப் புறக்கணிப்போம்!’’ - சட்டவிரோத மணல்குவாரியை எதிர்க்கும் தூத்துக்குடி மக்கள்

``தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாற்றங்கரை ஓரத்தில் சவுடுமண் குவாரி என்ற பெயரில் ஆற்றுமணல் அள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணிப்போம்” என அந்தப் பகுதியைச் சேர்ந்த நான்கு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தில் சவுடுமண் குவாரிக்கு அனுமதி பெற்றுவிட்டு, ஆற்றுமணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்குத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில், பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். “சவுடுமண் குவாரியை மக்கள் நலன் கருதி தேர்தல் ஆணையம் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம்” என தாப்பாத்தி, கீழ்நாட்டுக்குறிச்சி, சக்கிலிபட்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் சார்பில் ஒரு டிஜிட்டல் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு போர்டை மாசார்பட்டி போலீஸார் உடனே அகற்றினர்.  

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட  கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்ற விவசாயிக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 30 வருஷமா, இந்த நிலத்துல எந்த விவசாயமும் செய்யப்படல. இந்த நிலத்தில் மேலடுக்கில் சுமார் மூன்று அடிவரை படிந்துள்ள சவுடுமண்ணை அகற்றுவதற்கு லைசென்ஸ் பெறப்பட்டு,  சவுடுமண்ணுக்குப் பதிலாக ஆற்றுமணலைக்  கடந்த ஒரு  மாதத்துக்கும் மேலாக, அந்த விவசாயி லாரிகளில் அள்ளி விற்பனை செய்துகிட்டு  இருக்கார். அவருடைய நிலத்துக்குப் பக்கத்துல உள்ள வைப்பாற்று ஓரத்தில் அரசின் புறம்போக்கு நிலத்திலும் இரவு நேரங்கள்ல மணல் அள்ளப்பட்டு, அதனால் ஏற்படும் பள்ளத்தை சமன்படுத்தி விடுகின்றனர். 

அதிகாரிகளைச் சரிக்கட்டி கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்துல இருந்து தினமும் 400 டிப்பர் லாரிகளில் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. லாரி ஒன்றுக்கு ரூ.40,000 விலைக்கு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்துக்குப் பயன்படாத சவுடுமண் செங்கல் தயாரிக்க மட்டுமே பயன்படும். இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள செங்கல் சூளைகள் எதற்கும் இந்த மண் கொண்டு செல்லப்படவில்லை. சக்கிலிபட்டி - தாப்பாத்தி இடையேயான சாலை பல ஆண்டுகளாகப் போடப்படாமல் இருந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிய தார்ச்சாலை போடப்பட்டது. அந்தச்சாலை வழியாகத் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை பழுதாகி குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது.

`பணம் கிடைக்கிறது’ என்பதற்காகச் சட்டத்தை மீறி இதுபோன்று ஆற்றுமணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கிராம மக்கள் அன்றாடம் ஒருவித பயத்திலேயே இருக்கோம். தனிப்பட்ட ஒருவரின் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் அடிபணிகிறது. அரசு அளித்துள்ள அனுமதியைவிடவும் 20 அடி ஆழத்துக்குச் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. தவிர, மணல் அள்ளப்படும் பகுதியின்மீது உயர் மின் அழுத்த வயர்கள், மின்கோபுரங்கள் செல்கின்றன.

குவாரி அமைந்துள்ள இடத்தை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்திருக்காங்க. தமிழ்நாட்டுக்கே உரிய மரமான பனை மரங்கள் 20-க்கும் மேற்பட்டவை வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. இந்தச் சவுடுமண் குவாரியை மக்கள் நலன் கருதி தேர்தல் ஆணையம் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்தான் இந்தக் குவாரி அமைந்துள்ளது.  குவாரியை மூட உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் கீழ்நாட்டுக்குறிச்சியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து புறக்கணிப்போம்” என்கின்றனர் ஆதங்கத்துடன்.

பின் செல்ல