Published:Updated:

வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்... வேதனையில் தேனி பழங்குடியின மக்கள்!

வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்... வேதனையில் தேனி பழங்குடியின மக்கள்!
வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்... வேதனையில் தேனி பழங்குடியின மக்கள்!

“ஆறு மாசத்துல அரசாங்கம் வீடு கட்டிக் கொடுக்கலைனா…” – ராசிமலை பழங்குடியின மக்கள்.!

மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்திருக்கும் மஞ்சளாறு அணையின் மலைப்பகுதியில் உள்ளது, ராசிமலைக் காலனி என்கிற பழங்குடியினரின் குடியிருப்பு. அங்கிருந்த 28 வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளதால், மழைக்கு ஒதுங்கக்கூட வீடு இல்லாமல் குடிசைபோட்டு வாழ்ந்துவருகிறார்கள், அப்பகுதி மக்கள். என்னதான் நடந்தது? அவர்களின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடிக்க என்ன காரணம் என்பது போன்ற கேள்விகளோடு ராசிமலைக்குப் புறப்பட்டோம்.  

பெரியகுளம் அடுத்துள்ள தேவதானப்பட்டியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மஞ்சளாறு அணை. அணையின் பக்கவாட்டுப் பகுதியில் இரண்டு கிலோமீட்டர் சென்றால், இடிந்த கட்டடங்கள் நம்மை வரவேற்கின்றன. அதனருகே, சிறுசிறு குடிசைகள் போட்டு மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்... வேதனையில் தேனி பழங்குடியின மக்கள்!

”வருஷம் 2001. கொடைக்கானல் மலையில இருக்கும் டம்டம் பாறைக்கு அடிவாரத்துல அம்பாவி ஆத்துப் பக்கத்துலதான் எங்க கிராமம் இருந்துச்சு. மழையிலேயும், புயல் காத்துலேயும், காட்டு மிருகங்ககூடயேயும்தான் வாழ்ந்துட்டு இருந்தோம். மழை அடிச்சா எங்க கூரை வீடெல்லாம் பறந்துடும். அடிக்கடி நிறைய பேர் இறந்துபோவாங்க… இதெல்லாம் பாத்துட்டு இருந்த தேனி மாவட்ட கலெக்டர், 'இந்த இடத்திலிருந்து போயிருங்க… உங்களுக்கு வேற இடம் கொடுக்குறோம்'னு சொன்னாங்க. 'சரி'னு சொல்லித்தான் இந்த இடத்துக்கு வந்தோம். வீடெல்லாம் கட்டிக் கொடுத்தாங்க… ஆனா, கடைசியில நாங்க அம்பாவி ஆத்துப் பக்கத்துல எப்படி வாழ்ந்தோமோ அப்படியான நிலைக்கு வந்துவிட்டோம்” என்று கண்ணீரோடு பேசினார், லெட்சுமி.

வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்... வேதனையில் தேனி பழங்குடியின மக்கள்!

இவர்கள், மலையிலிருந்து இறக்கப்பட்டபோது, அவர்களுக்குக் குடியிருக்க வீடு அமைத்துக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது. அப்போது, ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம், இம்மக்களுக்குத் தேவையான வீடுகளை, தாம் கட்டிக்கொடுப்பதாக உறுதியளித்தது மட்டுமல்லாமல், மஞ்சாளாறு அணை அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 28 வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளது.

“நாங்க முதன்முதலா இங்கே வந்தப்போ வீடுகள் எல்லாம் நல்லா இருந்துச்சு. அடிச்ச வெயிலுக்கும், மழைக்கும் கொஞ்சம் கொஞ்சமா வீடுகள் எல்லாம் கீறல் விழ ஆரம்பிச்சது. என்ன நடக்குதுனு யோசிக்கிறதுக்குள்ள எல்லா வீடுகளும் மழைக்கு விழ ஆரம்பிச்சது. ஒருகட்டத்துல, இந்த வீட்டுல இருந்தா உயிருக்குப் பாதுகாப்பு இருக்காதுனு நினைச்சு வீட்டைவிட்டு வெளியேறிட்டோம். இந்தச் செய்தி மாவட்ட கலெக்டருக்குத் தெரிஞ்சி உடனே இங்கே வந்து பார்த்தார். அதிகாரிகள் எல்லாரும் வந்து பாத்தாங்க. அப்போ, ‘உங்களுக்கு கட்டிக்கொடுத்த வீடு தரமில்லாத வீடு. பேஸ்மட்டம் சரியா போடல. அதனால வீடு மொத்தமும் இடிஞ்சுபோயிடும். அதுக்கு நாங்களே வீட்டை இடிச்சுட்டு, புது வீடு கட்டிக் கொடுக்குறோம்’னு சொன்னாங்க. அதனை நம்பி நாங்களும் இருந்தோம். வீடுகள் மொத்தத்தையும் இடிச்சு தரைமட்டமா ஆக்கிட்டாங்க. இன்னையோட 6 மாசம் ஆகுது. 'இப்போ வீடு கட்டித்தர்றோம்… அப்போ வீடு கட்டித்தர்றோம்'னுதான் சொல்றாங்க… ஆனா, இப்போவரை எதுவும் நடக்கல” என்று ஆதங்கத்தோடு பேசினார், புவனேஷ்வரி.

வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்... வேதனையில் தேனி பழங்குடியின மக்கள்!

“மலையில இருக்கும் மா, எலுமிச்சைத் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கும், காவலுக்கும் போவோம். அன்றாடம் வேலைக்குப்போனாதான் கால்வயிறு கஞ்சி குடிக்க முடியும். அப்படியிருக்கையில, கலெக்டரைப் பாக்கணும்னா ஒருநாள் பட்டினியாதான் தேனிக்கு வரணும். இப்போ குடிசை போட்டு இருக்குற இடம், நாங்க வேலை செய்யுற தனியார் முதலாளிக்குச் சொந்தமான இடம். 'ஒரு வருசத்துக்குத்தான் நீங்க, இங்கே இருக்க முடியும்'னு எங்ககிட்ட கையெழுத்து வாங்கிருக்காங்க. இப்பவே ஆறு மாசம் முழுசா முடிஞ்சுபோச்சு. இன்னும் ஆறு மாசத்துல அரசாங்கம் வீடு கட்டிக் கொடுக்கலைனா… நாங்க எல்லாரும் வீடு இல்லாம, திரும்ப காட்டுக்குப் போகவேண்டியதுதான்” என்றார் குப்புசாமி.

வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்... வேதனையில் தேனி பழங்குடியின மக்கள்!

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், வீடுகள் இல்லாமல் பெரும் அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள். இரண்டு தினங்களாக தேனி வட்டாரத்தில் பெய்த கனமழை அவர்களை மேலும் அச்சப்படுத்தியுள்ளது. 'கட்டித் தரப்படும்' என உறுதியளித்ததால்தான், வீடுகளை இடிக்க அப்பகுதி மக்கள் உறுதியளித்துள்ளனர். அப்படி இருக்கையில், "இன்னும் கட்டட வேலைகளைத் தொடங்காததற்கு என்ன காரணம்" என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்டோம்,

”ராசிமலை மக்களுக்கான வீடுகள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. ராசிமலை மட்டுமல்லாமல், தேனியில் ஏழு இடங்களில், குடிசை மாற்று வாரியம் சார்பாகக் கட்டுமானப் பணிகள் நடைபெற இருக்கின்றன. இரண்டு தினங்களில் நான் ராசிமலைக்கு நேரில் சென்று பார்வையிட இருக்கிறேன். விரைவில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அவர்களுக்கு வீடுகள் கிடைக்கும். அதற்கு, நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்” என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு