Published:Updated:

ஏப்ரல் 13-ல் நாடு தழுவிய அளவில் 'சிறை நிரப்பு' போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

புதுடெல்லி, ஏப்.8,2011

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலுவாக இயற்றுவதற்கு மக்கள் பிரதிதிகளுடன் கூடிய கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுப்பதால், நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை காந்தியவாதி அன்னா ஹசாரே இன்று அறிவித்தார்.

ஏப்ரல் 13-ல் நாடு தழுவிய அளவில் 'சிறை நிரப்பு' போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை 4-வது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளார். (அன்னா அசாரே... ஆர்.டி.ஐ. முதல் லோக்பால் வரை)  
 
லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக, ஹசாரேவின் ஆதரவாளர்களுடன் மத்திய அமைச்சர் கபில் சிபல் இன்று காலை மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருந்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் கபில் சிபல் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. போராட்டக் குழுவுக்காக காத்திருப்பதாக அவர் தரப்பு கூறியுள்ளது.

அதேவேளையில், கபில் சிபலுக்காக காத்திருப்பதாக அன்னா ஹசாரே சார்பில் பேச்சு நடத்தும் சுவாமி அக்னிவேஷ் குழு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சூழலில், நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அன்னா ஹசாரே மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாடு முழுவதும் 'ஜெயில் பாரோ' (சிறை நிரப்பு) போராட்டத்தில் மக்கள் ஈடுபட வேண்டும். ஆனால், இதில் பங்கேற்பவர்கள் மகாத்மா காந்தியை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்தச் சூழலிலும் வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது," என்றார் அன்னா.

முதலில் ஏப்ரல் 12-ல் தான் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அன்றைய தினம் விடுமுறை என்பதால் ஏப்.13-ல் இப்போராட்டத்தை நடத்துவது என்பது முடிவு செய்யப்பட்டது.

பிரதமர், சோனியாவுக்கு கடிதம்...

இதனிடையே, ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு, அன்னா ஹசாரே இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.(அதன் விவரம் : பிரதமர், சோனியாவுக்கு அன்னா ஹசாரே கடிதம்)
 
முன்னதாக, ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை அரசு சாராத பொதுநலன் கருதும் குடிமக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இயற்றி, அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, மூத்த சமூகப் போராளியான அன்னா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 5-ம் தேதி தொடங்கி மேற்கொண்டுள்ளார்.

அவரது போராட்டத்தக்கு நாடு தழுவிய அளவில் பெரும் ஆதரவு குவிந்து வரும் நிலையில், இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டியுள்ளது.

உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்த கோரிக்கையை நிராகரித்தார் ஹசாரே.

முன்னதாக,  சுவாமி அக்னிவேஷ் மற்றும் அரவிந்த் கஜ்ரிவால் ஆகிய சமூக ஆர்வலர்களுடன் மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், லோக்பால் மசோதா வரைவுப் பணிக்கான கூட்டுக் குழு அமைக்க பேச்சளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதேவேளையில், அது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிட வேண்டும், அந்தக் குழுவுக்கு ஹசாரேவை தலைமையேற்க வைக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஊழலுக்கு எதிரான ஹசாரேவின் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், மாணவர்கள் மாணவர்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் பலரும் டெல்லியின் ஜந்தர் மந்தரில் முகாமிட்டு வரும் நிலையில், இணையத்தின் மூலமாகவும் ஹசாரே இயக்கத்துக்கு வலு சேர்ந்துள்ளது.

ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் தங்களது வலைப்பதிவுகள் மூலமாக இளம் தலைமுறையினர் ஹசாரேவை ஆதரித்து விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

டிவிட்டரில் 'Anna Hazare' என்ற டேகினை பயன்படுத்தி, இந்திய இணைய ஆர்வலர்கள் ஆதரவு கருத்துகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

ஜன் லோக்தல் மசோதா பற்றி...

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவை விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

தொடர்புடையவை :