Published:Updated:

ராஜபக்ஷே மே தின போராட்டம்: நெடுமாறன் கண்டனம்

Vikatan Correspondent

கொழும்பு, மே 2,2011

ராஜபக்ஷே மே தின போராட்டம்: நெடுமாறன் கண்டனம்

இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழர்கள் கட்டாயப்படுத்தப்படுத்திய ராஜபக்ஷேவை கடுமையாக் கண்டிப்பதாக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ராஜபக்ஷேவின் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கொழும்புவில் மே தினத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ##~~##

சிங்களச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும் சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளத் தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ராணுவத்தினால் மிரட்டப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக கிளிநொச்சிப் பகுதியிலிருந்து 20க்கு மேற்பட்ட பேருந்துகளில் தமிழர்கள் கொழும்புக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன.

அதைப் போல யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்களின் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கொழும்புவில் இருந்து சிங்களர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜபக்ஷேயின் இந்த முயற்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டப் பிறகும் தமிழர்கள் இன்னமும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது.

இந்தக் கொடிய சூழ்நிலையில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு ஐ.நா. சபை விரைந்து செயல்பட வேண்டும் என கோட்டுக் கொள்கிறேன்," என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.