Published:Updated:

ரயில்வேயில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: பயணிகள் அவதி!

விகடன் விமர்சனக்குழு
ரயில்வேயில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: பயணிகள் அவதி!
ரயில்வேயில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: பயணிகள் அவதி!
ரயில்வேயில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: பயணிகள் அவதி!

சென்னை: ரயில்வேத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின் ரயில்வே துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் பாதுகாப்பு வசதிகள், தரமான உணவு போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டிற்கும் வழி வகுத்தது. பொதுத்துறையுடன் தனியார் துறையும் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, ரயில்வே துறை ஊழியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து, இன்று (19ஆம் தேதி) நாடு முழுவதும் ரயில்வே துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் வளாகத்தில் நடந்த போராட்டத்தில், சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அங்கு திரண்ட ஊழியர்கள், ரயில்வே துறையின் தனியார் மயமாக்கும் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்ததால் அவர்களை உள்ளே விடவில்லை. இதனால் பொது மேலாளர் அலுவலக வளாகம் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தால் பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பயணிகள் பாதிப்பு

ரயில் ஊழியர்களின் போராட்டத்தால் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் முழுமையாக செயல்படவில்லை. மூர் மார்க்கெட்டில் புறநகர் ரயில் கவுண்டர்கள் 4 உள்ளன. அதில் 2 மட்டுமே இன்று செயல்பட்டன.

இதேபோல வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் வழங்கும் 9 கவுண்டர்களில் 2 மட்டுமே செயல்பட்டது. இந்த இரு கவுண்டர்களிலும் பயணிகள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் டிக்கெட் கிடைக்காததால் சிலர் ரயில்களை தவற விட்டனர்.

ரயில் முன்பதிவு மையத்தில் உள்ள 25 கவுண்டர்களில் 5 மட்டுமே செயல்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.