Published:Updated:

மதுவுக்கு எதிராக களமிறங்கிய ஐ.டி ஊழியர்கள்!

Vikatan Correspondent
மதுவுக்கு எதிராக களமிறங்கிய ஐ.டி ஊழியர்கள்!
மதுவுக்கு எதிராக களமிறங்கிய ஐ.டி ஊழியர்கள்!

நெல்லையில் தொடங்கிய மதுவுக்கு எதிரான போராட்டம், கல்லூரி மாணவர்கள் வரை தொடர்கிறது.

எவனோ ஒரு குடிகாரன் சாலையின் ஓரத்தில் விழுந்து கிடக்கிறான் என்று கடந்து சென்ற காலம் மாறி, அந்த எவனோ ஒரு குடிகாரனின் நலனுக்காவும், அவனுடைய குடும்பத்திற்காகவும் மதுக்கடைகளையும், மதுபாட்டில்களையும் உடைத்தெறிந்தது இச்சமூகம். போராட்டக் களத்தில் மாணவர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், இன்னொரு இடத்தில் மற்றுமொரு போராட்டத்தை தொடங்கி வைக்கிறது.

மதுவுக்கு எதிராக களமிறங்கிய ஐ.டி ஊழியர்கள்!

அப்படியொரு போராட்டம்தான், ஐ.டி ஊழியர்களை சோழிங்கநல்லூரில் ஒன்றிணைத்தது. 'இளந்தமிழகம்' எனும் அரசியல் இயக்கத்தினரால் மதுவிலக்கை வலியுறுத்தி, நேற்று மாலை சோழிங்கநல்லூரிலிருந்து டைடல் பார்க் வரை இருசக்கர வாகன பேரணி நடைபெறவிருந்தது. ஆனால் காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டதால், சோழிங்கநல்லூர் சந்திப்பில் காவலர்கள் சூழ, மதுவிலக்கை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர் ஐ.டி ஊழியர்கள்.

“தியாகி சசி பெருமாளின் இறப்புக்கு பிறகு, கடந்த பத்து நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவினர் சாலையில் இறங்கி டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிக்கிட்டு இருக்காங்க. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் அருகே இருக்கிற மதுக்கடைகளை மக்கள் அடிச்சு உடைச்சிருக்காங்க. ஆனா அரசோ இதை எல்லாம் கண்டுகொள்ளாம இருக்கு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐ.டி துறையை சேர்ந்த நாங்க, சோழிங்கநல்லூர்ல இருந்து டைடல் பார்க் வரைக்கும் ஒரு இருசக்கர பேரணிக்காக எல்லாரையும் ஒருங்கிணைச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா மதியம், காவல் துறையிலிருந்து வந்த அழைப்புல பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சொன்னாங்க.

மதுவுக்கு எதிராக களமிறங்கிய ஐ.டி ஊழியர்கள்!

இதனால் எங்களால பேரணிய முன்னெடுக்க முடியல. இதை, அரசும், காவல்துறையும், ஐ.டி ஊழியர்களோட குரலை ஒடுக்குற வடிவமாதான் நாங்க பாக்குறோம். சோழிங்கநல்லூர் சந்திப்புல அரசே நடத்தும் சாராயக் கடைகளுக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு மதுவினால் வரும் கேடுகளை விளக்கியும் இந்த போராட்டத்தை நடத்துறோம்.

நாங்க தமிழக அரசுகிட்ட இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஒன்று, மதுவுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடிவரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களுடைய போராட்டத்துக்கு இணங்கி அரசு உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.

மது விற்பனையின் மூலம் வரப் பணத்துல மக்களுக்கு இலவசங்களை கொடுக்குற அரசு, அவங்களுக்கு தேவையான கல்வியையும், சுகாதாரத்தையும், மருத்துவ வசதிகளையும் கொடுக்குறதில்லை. அரசு மக்களோட பொருளாதாரத்தை பிடுங்கி, நாட்டோட பொருளாதாரத்தை உயர்த்தத் தேவையில்லை.

அதனால் அரசாங்கம் உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடி, மதுவிலக்கு அறிவிக்கனும்னு கேட்டுக்குறோம்” என்றார் இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் வினோத்.

-ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிகையாளர்)