Published:Updated:

மார்க்சிஸ்ட் மறியல்: சென்னையில் ராமகிருஷ்ணன், 700 பேர் கைது

சென்னை: பால் விலை மற்றும் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சாலைமறியல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்தர்ராஜன், பீமராவ் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, ராமகிருஷ்ணன் கூறுகையில், "பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் தமிழக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்," என்றார்.
 
இதேபோல் கோவை, நெல்லை, திருப்பூர், கிருஷ்ணகிரி, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், விலை உயர்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.