Published:Updated:

மும்பையில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஹஜாரே!

மும்பையில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஹஜாரே!
மும்பையில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஹஜாரே!
மும்பையில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஹஜாரே!

மும்பை: வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதத்தை மும்பையில் இன்று மதியம் தொடங்கினார்.

ஹஜாரேவுக்கு எதிராக கறுப்புக் கொடி...

மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜூஹூவுக்கு ஹஜாரே சென்றார். அப்போது அங்கு கூடிய எதிர்ப்பாளர்கள், அவருக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

ஜூஹூ கடற்கரையில் இருந்து உண்ணாவிரத மைதானத்துக்கு பேரணியாக வந்த ஹஜாரேவுக்கு மக்கள் வழி நெடுகிலும் ஆதரவு தெரிவித்தனர்.

உண்ணாவிரதம் நடைபெறும் மைதானத்தில் ஆயிரகணக்கான மக்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி காலையில் இருந்து காத்துக் கிடந்தனர்.

உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்...

மும்பை பந்த்ரா - குர்லா வளாகத்தில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் அமைக்கப்பட்ட  மேடையில் மதியம் 12.45 மணியளவில் ஹஜாரே தனது உண்ணாவிரத்தைத் தொடங்கினார்.

ஹஜாரே உண்ணாவிரதத்துக்கான பாதுகாப்புக்காக மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் போலீஸார், 200 சப்-இன்ஸ்பெக்டர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, ரிசர்வ் போலீஸ் படை, அதிவிரைவு படை, வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரத மேடையின் பின்புறம் ஹஜாரே ஓய்வெடுப்பதற்காக தனி அறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தில் 6 அவசர வழிகள், 6 மெட்டல் டிடெக்கர் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ வசதிக்காக 12 டாக்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தில் ஆங்காங்கே 36 நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோரிக்கைகள் என்ன?

நாடாளுமன்றத்தில் புதிய லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சிறப்பு விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஹஜாரே போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

மத்திய அளவில் செயல்படும் லோக்பால், மாநில அளவில் செயல்படும் லோக் ஆயுக்த இரண்டுமே தங்களுக்கென சுததிரமான விசாரணை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்;

லோக்பால் அமைப்பின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவும், தேர்வுக் குழுவினரின் ஒருமித்த கருத்துடனும் நியமிக்கப்பட வேண்டும்;

சிபிஐ-யின் ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு லோக்பாலுடன் இணைக்கப்பட வேண்டும். அதேபோல மாநில ஊழல் ஒழிப்பு, லஞ்ச ஒழிப்புப் பிரிவு லோக் ஆயுக்தவுடன் இணைய வேண்டும்;

சிபிஐ-யின் நிதி, நிர்வாகக் கட்டுப்பாடுகள் லோக்பால் அமைப்பின் கீழ் வர வேண்டும். சிபிஐ இயக்குநர் நியமனம் சுததிரமானதாக இருக்க வேண்டும், அதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது.

சி, டி பிரிவு அரசு அதிகாரிகளை லோக்பால், லோக் ஆயுக்த விசாரணை அமைப்புகள் நேரடியாக விசாரிக்க அதிகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஹஜாரா தனது போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

சிறை நிரப்பு போராட்டம்...

தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுவது உறுதி என்று அண்ணா ஹஜாரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹஜாரே அழைத்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க இணைய தளம், எஸ்.எம்.எஸ். மூலமாக பதிவு செய்து கொள்ளுமாறு அவரது குழு அழைப்பு விடுத்திருந்தது.

தற்போதைய நிலவரப்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 1.37 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.