Published:Updated:

மீண்டும் சூடுபிடித்தது 'லோக்பால்': செய்திச் சுருக்கம் - டிச. 27,2011

மீண்டும் சூடுபிடித்தது 'லோக்பால்': செய்திச் சுருக்கம் - டிச. 27,2011
மீண்டும் சூடுபிடித்தது 'லோக்பால்': செய்திச் சுருக்கம் - டிச. 27,2011

மீண்டும் சூடுபிடித்தது 'லோக்பால்': செய்திச் சுருக்கம் - டிச. 27,2011

ஊழலுக்கு எதிரான புதிய லோக்பால் மசோதா தொடர்பாக, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காரசார விவாதங்கள் நடந்தன.

பிஜேபி பரிந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்றுக்கொண்டு லோக்பால் மசோதாவை மேம்படுத்தாவிட்டால், அந்த மசோதாவை வாபஸ் வாங்குங்கள் என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் முழங்கினார்.

புதிய லோக்பால் மசோதாவை மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி, அது பற்றி விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அண்ணா ஹஜாரே வலியுறுத்தலின் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும் என்று ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேட்டுக்கொண்டார்.

பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் லோக்பால் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தன.

பின்னர், ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதே அரசின் நோக்கம் என்றும், சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது என்றும் குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன் சிங், லோக்பால் மசோதாவை தற்போதைய வடிவிலேயே நிறைவேற்ற ஒத்துழைப்புத் தருமாறு, எதிர்கட்சிகளை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

*

இதனிடையே, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதத்தை மும்பையில் செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கினார்.

ஹஜாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மும்பை பந்த்ரா - குர்லா வளாகத்தில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா ஹஜாரே பேசுகையில், லோக்பால் விஷயத்தில் மக்களுக்கு மத்திய அரசு  துரோகம் செய்துவிட்டதாகவும், தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார்.

அதேவேளையில், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். ஹஜாரே தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

*

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உசச் நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை அளிக்கும் வரை, அவசரகாலத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்படுவதை நிறுத்திவைத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் தலைமையில் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

*

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்தை 6 வாரத்துக்குள் நிரப்ப வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*

தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 60 வயது நிறைவு செய்த நெசவாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.400-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

*

பகவத் கீதைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, ரஷ்ய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.

*

வங்கக் கடலில் உருவாகியுள்ள தானே புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

*

சென்னை அருகே மையம் கொண்டுள்ள இந்தப் புயல், கடலூர்- நெல்லூர் அருகே வரும் 30-ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*

மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 96 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்திருந்தது.

*

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,594 ரூபாயாக இருந்தது.

*

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.

நிதானமாக பேட் செய்து வந்த டிராவிட் 68 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த இன்னிங்ஸ்சில் தனது 100வது சதத்தை அடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கபட்ட சச்சின் டெண்டுல்கர் 73 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார்.

அடுத்த கட்டுரைக்கு