Published:Updated:

போராட்டத்தில் இறந்த மாற்றுத் திறனாளி உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

போராட்டத்தில் இறந்த மாற்றுத் திறனாளி உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி
போராட்டத்தில் இறந்த மாற்றுத் திறனாளி உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு, மரணமடைந்த  மாற்றுத் திறனாளி காட்பாடி குப்புசாமி உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,   "அரசு பணிகளில் மூன்று சதவீத இடஒதுக்கீடு, மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே உதவி, அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுதிறனாளி காட்பாடி குப்புசாமி திடீரென்று மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்களுக்கும், அவரை இழந்து வாடும் மற்ற மாற்றுதிறனாளி போராளிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டேன். இந்த போராட்டத்தில் பங்கேற்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராம் அவர்களையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்.

போராட்டத்தில் இறந்த மாற்றுத் திறனாளி உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மாற்று திறானாளிகள் போராட்டம் என்றதும் காலை உணவுக் கூட சாப்பிடாமல் ஓடோடிச் சென்று அவர்களை சந்தித்து குறைகளை தீர்த்து வைத்தவர் தலைவர் கலைஞர். கழக ஆட்சியில் மாற்று திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் "ஆதரவற்ற மாற்றுதிறனாளிகளுக்கு" மட்டுமே உதவித்தொகை என்று மாற்றப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் தங்கள் பத்து அம்ச கோரிக்கைகள வலியுறுத்தி போராடியவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை.

அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி விட்டு இது வரை நிறைவேற்றாமல் இருக்கும் அதிமுக அரசு, போராடும் மாற்று திறனாளிகளை குண்டுக் கட்டாக காவல்துறையை வைத்து தூக்கிப் போடுவதும், கைது செய்வதுமாக இருந்தது. இன்றைக்கு அதிமுக அரசின் பாராமுகத்திற்கு ஒரு மாற்றுத் திறனாளியின் உயிர் பறி போயிருக்கிறது. அதிமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சி முடியப் போகும் தருவாயில் இருக்கும் அதிமுக அரசிடம் இனி போராடி நியாயம் கிடைக்காது என்பதால், மாற்று திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, கழக அரசு அமையும் வரை காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது உங்கள் கோரிக்கைகளை கைவிடுங்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாற்று திறனாளிகளுக்கு இனியும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். கழக அரசு அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

கருணாநிதி 1 லட்ச ரூபாய் நிதி உதவி:

குப்புசாமியின் மரணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,  " மாற்றுத் திறனாளிகளின் சங்கப் பிரதிநிதிகளை உரிய நேரத்தில் அரசு சார்பில் அழைத்துப் பேசியிருந்தால் குப்புசாமி என்ற அந்த மாற்றுத் திறனாளி மறைந்திருக்க மாட்டார். மறைந்த அந்த மாற்றுத் திறனாளி குப்புசாமியின் மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் தி.மு. கழக அறக்கட்டளை சார்பில் உதவி நிதியாக அளிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு