Published:Updated:

டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: கேஸ் தட்டுப்பாடு அபாயம்

Vikatan Correspondent

நாமக்கல்: புதிய வாடகை ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதன் எதிரொலியாக, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கேஸ் டேங்கர் லாரிகளுக்கு புதிய வாடகை ஒப்பந்தத்தினை அமல்படுத்தாமலும், கூடுதலாக பங்கேற்ற 600 கேஸ் டேங்கர் லாரிகளுக்கு பணி உத்தரவு வழங்காமலும் காலதாமதம் செய்து வந்தன.

எனவே, புதிய வாடகை ஒப்பந்தத்தினை உடனடியாக அறிவிக்கக் கோரியும், கூடுதலாக பங்கேற்று உள்ள லாரிகளுக்கு வேலை வழங்கக்கோரியும் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் செய்தனர்.

இவர்களின் போராட்டம் 7 நாட்கள் நீடித்தது. இதையடுத்து சென்னையில் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடந்த தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்களின் செயற்குழு கூட்டத்தில் ஆயில் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டபடி, வருகிற 29-ம் தேதிக்குள் புதிய வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் இருந்தாலும்,

டெண்டரில் பங்கேற்ற 600 வாகனங்களுக்கும் வேலை வழங்காமல் இருந்ததாலும் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் சமையல் கியாசை ஏற்றுவது இல்லை என முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் என 3 ஆயில் நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும் , ஆயில் நிறுவனங்கள் இதுவரை டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டம் நேற்று சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நாமக்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் 3 ஆயில் நிறுவனங்களும் கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத காரணத்தால், வருகிற 29.2.2012 நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களையும் இயக்குவது இல்லை.

மேலும், அனைத்து வாகனங்களையும் ஏற்றுக்கொண்டு, புதிய வாடகை ஒப்பந்தம் முடிவு செய்து, வேலை உத்தரவு அனைவருக்கும் வழங்கிய பிறகே வாகனங்களை இயக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில், "ஆயில் நிறுவனங்கள் கடந்த 19-ம் தேதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வாகனங்களை இயக்குவது இல்லை என முடிவு செய்து உள்ளோம்.

அனைத்து வாகனங்களையும் ஏற்றுக்கொண்டு, புதிய வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றி, வேலை உத்தரவு வழங்கும் வரை எங்களது போராட்டம் காலவரையின்றி தொடரும்," என்றார்.