Published:Updated:

தீவிரமடைகிறது கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

நாமக்கல்: முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக, சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் மேலும் தீவிரம் அடைகிறது.

இந்த வேலைநிறுத்தம் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று நாமக்கல்லில் அவசர பொதுக்குழு கூட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

இந்த சங்கத்தினர் சமையல் கியாஸ் லாரிகளுக்கான புதிய வாடகை ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்ற கோரியும், கூடுதலாக பங்கேற்று உள்ள லாரிகளுக்கு வேலை வழங்க கோரியும் கடந்த 29-ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லும் பணி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த தொழிலை நம்பி உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று முன்தினம் தமிழக அரசு அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர்கள், ஆயில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை கமிஷனர் பஷீர் அகமது தலைமையில் சென்னையில் நடந்தது.

ஏறத்தாழ 11 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே போராட்டத்தை தீவிரப்படுத்த தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர். இதையொட்டி நாமக்கல்லில் இன்று அவசர பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.