Published:Updated:

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி கருத்து தெரிவித்த சிதம்பரத்துக்கு கொலைமிரட்டல்...!

Vikatan Correspondent
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி கருத்து தெரிவித்த சிதம்பரத்துக்கு கொலைமிரட்டல்...!
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி கருத்து தெரிவித்த சிதம்பரத்துக்கு கொலைமிரட்டல்...!


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.

மும்பையிலிருந்து வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், ஞாயிறுதோறும் சிறப்புக் கட்டுரைகளை எழுதி வரும் ப.சிதம்பரம் கடந்த 16-ம் தேதி  'சர்ஜிக்கல் அட்டாக்' பற்றிய கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

இந்திய ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி திரும்பியது. இந்தத் தாக்குதலை ராணுவத்தினர் 'சர்ஜிக்கல் அட்டாக்' என்று வர்ணித்தனர்.

'சர்ஜிக்கல் அட்டாக் நடத்தி நமது ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துவிட்டது' என மத்திய அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் இந்தத் தாக்குதல் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள்.
இந்த வகையில்தான் ப.சிதம்பரமும் சர்ஜிக்கல் அட்டாக் குறித்து தனது விமர்சனத்தை கட்டுரையாக எழுதியிருந்தார். அதில், 'இது முதல்முறையாக இந்திய ராணுவம் மேற்கொண்டதுபோல், மத்திய அரசு பேசிவருகிறது. ஆனால் இதுபோன்ற சர்ஜிக்கல் அட்டாக்கினை ஏற்கெனவே பல முறை நமது ராணுவம் நடத்தியுள்ளது. அதைப் பற்றிய விஷயங்களை வெளியிடுவது அவசியமில்லை. ஆனால், இதையும்கூட இப்போது மத்திய அரசு அரசியலாக்கி வருகிறது' என்ற ரீதியில் குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கட்டுரை இணைய தளத்தில் வெளியான சில மணித்துளிகளில், ராஜகோபாலன் என்ற பெயரில், ப.சிதம்பரத்துக்கு கொலை மிரட்டல் விடும் தொனியில் ஒரு ட்விட்டர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், 'ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ப.சிதம்பரத்தையும் அவரது குடும்பத்தையும் கொல்வதுதான் சிறந்த வழி' என்று குறிப்பிட்டுள்ளார் அந்த மர்ம நபர்.

இந்தப் பதிவு சிதம்பரம் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் உடனடியாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். இதையடுத்து ட்விட்டர் பதிவைப் அப்படியே புகைப்படம் எடுத்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அருள்பெத்தையா, சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜிடம் புகார் அளித்துள்ளார்.

சைபர் க்ரைம் போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட ட்விட்டர் பக்கத்தை அவர்கள் முழுமையாக ஆய்வு செய்துவருகின்றனர் . இந்த மிரட்டல் விடுத்த ராஜகோபாலன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ''இவர் ஐ.டி துறையில் பணிபுரியும் நபராக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் ராஜகோபாலனைப் பிடித்துவிடுவோம்'' என்கின்றனர் காவல்துறையினர்.

முதல்வரின் உடல்நிலைக் குறித்து வதந்தி பரப்பியவர்களை கைது செய்து வரும் சூழ்நிலையில், இப்போது அடுத்த அதிரடியாக இவ்விவகாரம் பரபரக்கிறது!

- அ.சையது அபுதாஹிர்