Published:Updated:

“ஆம்... நாங்கள் சமூகவிரோதிகள்தான்” - மெரினா முதல் தாமிரபரணி வரை! இளைஞர்களின் போராட்ட பயணம்!

“ஆம்... நாங்கள் சமூகவிரோதிகள்தான்” - மெரினா முதல் தாமிரபரணி வரை! இளைஞர்களின் போராட்ட பயணம்!
“ஆம்... நாங்கள் சமூகவிரோதிகள்தான்” - மெரினா முதல் தாமிரபரணி வரை! இளைஞர்களின் போராட்ட பயணம்!

“ஆம்... நாங்கள் சமூகவிரோதிகள்தான்” - மெரினா முதல் தாமிரபரணி வரை! இளைஞர்களின் போராட்ட பயணம்!

த்திய அரசின் சமீபகால செயல்களால், தமிழகம் வஞ்சிக்கப்பட்ட பூமியாக மாறிவிட்டது என்றே கூறலாம். தமிழர்களின் கலாசாரத்தையும், வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் நோக்கோடு மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், "நாங்கள் உயிரோடு இருக்கும்வரை, எந்த சக்தியும் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், வாழ்வாதாரத்தையும் அழிக்க முடியாது" என்று இளைஞர் பட்டாளம் நெஞ்சை நிமிர்த்தி போராடத் துணிந்து விட்டனர். 

ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன், தாமிரபரணி, மீனவர் பிரச்னை என நிறையப் பிரச்னைகள் வந்தாலும், ஒரே நேரத்தில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எதிராக, இளைஞர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், தமிழக இளைஞர்களைப் போராட்டம் நடத்த விடக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் மீறி தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களுக்கு அரசு கொடுத்துள்ள பட்டம் 'தேசத்துரோகிகள்', 'சமூக விரோத கும்பல்', 'பொறுக்கிகள்' என்பதுதான். இந்தப் பட்டங்கள் யாவும் வெறும் வார்த்தைகளோடு முடிந்து விடுவதில்லை. தமிழக காவல்துறை உதவியுடன், அவற்றை உண்மையாக்கும் செயல்களும் ஓசையின்றி அரங்கேறி வருகின்றன.

ஜல்லிக்கட்டுப் போராட்டம், எந்தக் காலத்திலும் யாராலும் எளிதாக மறக்க முடியாத ஒன்று. தன் இனத்தின் கலாசாரத்தை அழிக்க நினைத்த ஒரு அரசுக்கு எதிராக, ஒரு மாநிலமே ஜாதி, மதம், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி அனைவரும் முன்னெடுத்து நடத்தியதுடன், தங்களது கோரிக்கையில் வெற்றியும் கண்ட போராட்டம். சென்னை மெரினாவில் நடந்த இந்தப் போராட்டம் பற்றி உலகமே நன்கு அறியும். ஆனால் அந்த மெரினாவில் கிளர்ச்சி எழ காரணமே, அலங்காநல்லூர்தான். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் மெரினா போராட்டக்களத்தில் குதித்தனர். ஆனால் சிலர் சென்னையிலிருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் அலங்காநல்லூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் கீதா, கார்த்திகா, வினோத் ராஜ் சேஷன், கார்த்திக், உமர் முக்தர், சிவகுமார், அமுதா, துர்கா, சரவணன் ஆகிய இளைஞர்கள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து அலங்காநல்லூர் சென்று போராடியவர்கள். போராடப் புறப்பட்டுச் சென்றபோது நன்றாகத்தான் சென்றார்கள். ஆனால், போராட்டம் முடிந்து ஊர் திரும்பும் போதுதான், தேச விரோதிகள், சமூகத்தை சீர்குலைப்போர், தீவிரவாதிகள் என்ற பெயர்களோடும், காவல்துறையினரின் துன்புறுத்தல்களால் உடம்பில் ஏற்பட்ட மறையாத ரத்தக்காயங்களோடும் வந்து சேர்ந்தனர்.

"இனி போராட்டத்தில் பங்கேற்றால், வெளியில் தலைகாட்ட முடியாத வழக்குகளில் பெண்களையும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டோர் என்று கூறி அதற்கான பட்டியலில் ஆண்களையும் சேர்த்து விடுவோம்" என மிரட்டியிருக்கிராகள் காக்கிகள். "அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் அன்னராஜின் மிரட்டல் மிக அதிகமாக இருந்தது" என்று அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்ட இளைஞர்கள், "போராட்டத்தில் ஒருவழியாக வெற்றி கிடைத்ததால், காவலர்களால் உண்டாக்கப்பட்ட உடல் காயங்களின் வலி எங்களை ஒன்றும் செய்யவில்லை" என்றனர். எனினும், அண்மையில் ஹைட்ரோகார்பன் பிரச்னை என்று சொன்னதும் மீண்டும் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட நெடுவாசல், தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம், தாமிரபரணிக்கு ஆதரவு குரல், மீனவ இளைஞர் பிரிட்ஜோ கொல்லப்பட்டதைக் கண்டித்து தங்கச்சிமடம் என வீட்டில் இருந்து கிளம்பி அந்தந்த ஊர்களுக்குச் சென்று பல நாட்களாகப் போராடி வருகின்றனர் அவர்கள். இந்த இளைஞர்களை எப்படியாவது சமூக விரோதிகள் பட்டியலில் சேர்த்து விடவேண்டும் என்று காவல்துறையினரும் இவர்கள் பின்னாலேயே சுற்றி வந்து, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்ன நடந்தது என்பது குறித்து, தங்கச்சிமடத்தில் இருந்த கார்த்திகா, கீதாவிடம் நாம் கேட்டோம்...

"ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக வலைதளங்களில் வந்த தகவல்களைப் பார்த்து அலங்காநல்லூர் சென்றோம். அதற்கு முன்னர் எங்களுக்குள் பழக்கம் கிடையாது. நாங்கள் அனைவரும் போராட்டக் களத்தில்தான் நண்பர்களானோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, காவலர்கள் எங்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். போராட்டக்காரர்ளுக்கு உதவி செய்த 80 வயசு பாட்டியைக் கூட காவல்துறையினர் அடிச்சாங்க. எல்லோரையும் லத்தியாலும், கல்லாலும் அவர்கள் தாக்கினர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு எங்களிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, 'இனி நீங்கள் போராட்டம் என்று எங்கேயாவது போனீங்க, வெளில தலைகாட்ட முடியாதபடி செஞ்சிருவோம்னு' சொல்லி மிரட்டினாங்க. எல்லாரோட வீட்டுல இருந்தும் ஆட்கள வரச்சொல்லி மிரட்டினாங்க. உடம்பில் காவல்துறையினர் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களோடுதான் நாங்க வீட்டுக்குப் போனோம். ஹைட்ரோகார்பன் பிரச்னை வந்தப்போ, நாங்க எல்லோரும் சேர்ந்து போராடப் போகலாம்னு முடிவு பண்ணோம். இதனால எங்க வாழ்க்கையே அழிஞ்சாலும் பரவாயில்லைன்னு கிளம்பத் தயாரானோம். வீட்ல அப்பா, அம்மாகிட்ட என் சகோதரர்களும், அந்த ஊர் அப்பா, அம்மாக்களும் எங்களைப் பத்திரமா பார்த்துப்பாங்கன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம். நெடுவாசல் போராட்டம், தஞ்சாவூர் உண்ணாவிரதப் போராட்டம் முடித்து, இப்போ இங்க வந்துருக்கோம். ஆனா, போலீஸ்காரங்க நெடுவாசல்ல இருந்து எங்கள பின்தொடர்ந்து வர்றாங்க. இப்போ மீனவருக்கு ஆதரவு கொடுக்க வந்தோம். சில காவல்துறையினர் எங்களை மிரட்டுறாங்க. 'நீங்க எதுக்கு இங்க வந்தீங்க. உங்களுக்கும், இவங்களுக்கும் என்ன தொடர்புன்னு' கேக்கறாங்க. ஒழுங்கு மரியாதையா கிளம்பிடுங்கன்னு சொல்லி மிரட்டிட்டு போறாங்க. உமர் முக்தருக்கு, மதுரை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து விசாரணை இருக்குனு போனவாரம் வரச் சொன்னங்க. அப்பறம் அந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. கைக்கு மாறிடுச்சு, அதனால, அவங்க நேற்று மதுரைக்கு வரச் சொன்னாங்க. உமரும் மதுரைக்கு போயிருக்கார். தமிழ்நாட்டுக்கு ஒரு பிரச்னைன்னா எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம். எந்த பிரச்னை வந்தாலும் பயப்படமாட்டோம்" என்று உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவிக்கின்றனர்.

கீதாவுக்கு அலங்காநல்லூர் போராட்டத்தின்போது, போலீஸார் தாக்கியதில், முகத்தில் ஒருபக்கம் பலமான அடிபட்டு இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இருப்பினும் அடுத்தடுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸாரின் அடாவடி பற்றி உமர் முக்தர் நம்மிடம் பேசியபோது, "அலங்காநல்லூர் போராட்டத்தில் கூடியிருந்தவர்களை தாக்கி, கைது செய்யப்பட்ட அனைவரின் பொருட்களையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இன்றுவரை அந்த பொருட்கள் உரிமையாளர்களுக்குத் திருப்பி கொடுக்கப்படவில்லை. என்னுடைய கார், லேப்டாப், மொபைல் போன் என அனைத்தையும் பிடுங்கிக் கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல், எட்டு பக்கம் கொண்ட விசாரணை பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்கக்கூட அனுமதிக்கவில்லை. 'தீவிரவாதிகளுக்கு எல்லாம் படிக்க அனுமதி இல்லை' என்று மிரட்டினார்கள். மேலும் மோசமான வார்த்தைகளினால், கடுமையாகப் பேசினார்கள். ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்து கேட்டனர். முதலில் நான் கையெழுத்து போடவில்லை. தொடர்ந்து என்னை மிரட்டி, கையெழுத்து போட்ட பின்னரே போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே விட்டாங்க. ஆனாலும், என் உடைமைகளைத் தரவில்லை. என் காரை, போலீஸ் வாகனத்தைக் கொண்டு மோதி உடைத்தார்கள். இப்போ நெடுவாசல் போராட்டத்தின்போது, காவலர்கள் எங்களை மிரட்டினார்கள். அப்போது, மார்ச் 7-ம் தேதி விசாரணைக்கு வரவேண்டும் என்று சம்மன் வந்தது. விசாரணை முடிச்சிட்டு வந்தேன். இப்போ மீனவர் பிரச்னைக்கு நண்பர்கள் எல்லாரும் வந்தோம். காவர்கள் இங்கும் மிரட்டினார்கள். பின்னர் மதுரை காவல்நிலையத்திலிருந்து போன் வந்தது. அதில், உங்கள் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. அவசியம் வர வேண்டும் என்று கூறியதால், நேற்று (10.3,2017) மதுரையில் இருந்தேன். நான் இங்கு வந்ததும் போராட்டக் களத்தில் இருக்கும் என் நண்பர்களை மிரட்டி கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்" என்றார்.

"தமிழ்நாட்டில் நன்மைக்காக நடைபெறும் எந்தப் போராட்டமானாலும், நாங்கள் கலந்து கொள்வோம். அப்படி கலந்துகொள்வதாலேயே எங்களை சமூக விரோதிகளாக காவல்துறை பாவித்தால், எங்களுக்குக் கவலையில்லை" என்கின்றனர் அந்த இளைஞர்கள். அவர்களின் மன தைரியத்தைப் பாராட்டி வரவேற்பதோடு, காக்கிகளின் அராஜக செயல்பாடுகளிலிருந்தும் இவர்களை பாதுகாப்பதும் நமது முக்கிய கடமையாகும்.

- ஜெ.அன்பரசன்

அடுத்த கட்டுரைக்கு