Published:Updated:

தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள்: பா.ஜனதாவுக்கு முற்றுகிறது நெருக்கடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள்: பா.ஜனதாவுக்கு முற்றுகிறது நெருக்கடி
தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள்: பா.ஜனதாவுக்கு முற்றுகிறது நெருக்கடி

தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள்: பா.ஜனதாவுக்கு முற்றுகிறது நெருக்கடி

மிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 20 நாட்களாகத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநில விவசாயிகள் உள்ளிட்ட அண்டை மாநில விவசாயிகளும் நேரடியாகச் சென்று தங்களின் ஆதரவை அளித்து வருகிறார்கள்.

எதிர்க்கட்சியான திமுக தொடங்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி என்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக, டெல்லி ஜந்தர் மந்தர்க்கு சென்று தங்களின் ஆதரவினை அளித்தனர். தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று பேச்சு வார்த்தை  நடத்தினார். ஆனாலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இது தொடர்பாக, நடிகர் விஷால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுத்தனர். நாட்கள்தான் கடந்து செல்கின்றனவே தவிர மத்திய அரசு கொஞ்சம்கூட இறங்கிவரவில்லை, ஏன் தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள் என்று நேரில் அமைச்சர்கள் வந்து கேட்கவும் இல்லை, அவர்களின் வாழ்வாதர சிக்கல்கள் குறித்துக் கவலை கொள்ளவும் இல்லையே என்று கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறார்கள் தமிழக விவசாயிகள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத்தை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட பல்வேறு விவசாய நலன் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்கிறார்கள் தமிழக  விவசாயிகள். தொடர்ப் போராட்டத்தை, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது. நாட்கள் 20 கடந்தாலும் போராட்டத்தில் வலிமையை இழக்காமல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள்.

டெல்லியில் வாழ்க்கையை மீட்டெடுக்க அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள், விவசாய அமைப்பினர் என்று பல தரப்பு மக்கள் ஆங்காங்கே அடையாள போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று (திங்கள்) கூட கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதே போல சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு நாள்தோறும் ஆதரவு பெருகிவருவது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. இந்திய அளவில், போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. லாரிகள் வேலை நிறுத்தம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் வெடித்துள்ள போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் என்று தினமும் போராட்ட கொதிநிலையில் உள்ளது தமிழ்நாடு.

வேளாண் தொழிலை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்க முயற்சி!

விவசாயிகள் தங்கள் வாழ்வாதரத்தை மீட்க நீண்ட நாட்களாக மேற்கொண்டுள்ள தொடர்ப் போரட்டம் குறித்தும் மத்திய அரசு செய்யவேண்டியது பற்றியும் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரனிடம் பேசினோம். அவர் கூறுகையில், "தமிழக விவசாயிகள் போராடுவது குறித்து மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கோ, மாநிலத்தில் ஆளும் அரசுக்கோ எந்தவித அக்கறையும் இல்லை. இப்போதுகூட எங்கள் அமைப்பு சார்பாக தஞ்சாவூரில் விவசயிகள் நலம் காக்க, கறுப்புக்கொடி ஏந்தியபடி போராட்டம் நடத்தினோம். இது போன்ற போராட்டங்கள் எந்த வகையிலும்  மத்திய அரசின் காதுகளை எட்டவில்லை. அல்லது எட்டாத வகையில் அரசுகள் உள்ளன. 

மேலும், மத்திய அரசைப் பொறுத்தவரை எல்லா போராட்டங்களையும் சாதாரண விஷயமாகவே பார்க்கிறார்கள். சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதில் அவரின் அரசியல் நன்றாகவே வெளிப்படுகிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சீரியஸாக உள்ள பிரச்னையை பா.ஜனதா அக்கறை கொண்டு பார்க்கவில்லை.

பொறுப்பாக மத்திய அரசு விவசாயிகள் பிரச்னையை கவனித்து இருந்தால், காவிரி மேலாண்மை வாரியத்தில் அக்கறை கட்டி இருக்கும்.அதில் ஒற்றை ஆணையம் என்பதைக் கொண்டுவந்திருக்காது. காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என்று கூறி, இந்தியாவின் துண்டு துக்காணி நதிகள் எல்லாவற்றின் பிரச்னைகளையும் ஒற்றை ஆணையத்தில் வைத்துப் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று ஆணையிட்டுள்ளது பா.ஜனதா அரசு.27 ஆண்டுகளாக தீராத காவிரி பிரச்னையைத் தீர்த்துவைப்பதில் தங்களுக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

அதே போல வறட்சியைத் தடுக்க, பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் காக்க மத்திய அரசு உரிய நவடிக்கையை எடுக்கவில்லை. அது தொடர்பாக ஆய்வு செய்ய வந்த மத்திய நிபுணர்கள் குழு, 2400 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் தமிழகத்திற்குப் போதுமானது என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. அதையடுத்த 1740 கோடி ரூபாயை மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியாக அறிவித்தது. இதுவே அவர்களின் குறைத்து மதிப்பிடும் நிலைக்கு உதாரணம். மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்துகிறது. வஞ்சிக்கிறது.

மேலும், தொடர்ச்சியான துன்பங்கள் வந்து அவை தீராமல் இருந்தால், தமிழகத்தின் சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட மத்திய அரசு முனைப்புக் காட்டுகிறது. ஏன் எனில் பா.ஜனதா அரசின் கொள்கையே 'வணிக வேளாண்மை' என்பதாகும். விவசாயத்தை முழுமையாக கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு விற்றுவிடுவதே இந்தக் கொள்கையின் நோக்கம். இன்னும் 20 ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயம் விவசாயிக்குச் சொந்தமானதாக இருக்காது, விவசாய நிலமும் விவசாயியின் கையைவிட்டுப் பிடுங்கப்பட்டுவிடும். ஒரு அடி விளைநிலம்கூட விவசாயிக்கு இருக்காது என்ற நிலையை உருவாக்கவே மத்திய அரசு இப்போது திட்டமிட்டுச் செயல்பட்டுவருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்த பட்ஜெட்டில், 'ஒப்பந்த முறை விவசாயத்திற்கு சட்டவடிவம் கொண்டுவருவோம் என்று அறிவித்து இருக்கிறது. அதாவது, மரபு ரீதியாக விவசாயம் செய்யும் பாணியை விட்டுவிடுவேண்டும் என்று வேளாண்மை செய்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கிறது. இந்தப் பாதையில்தான் மீதுதான் மாநில அரசுகளும் செல்லும். எனவே தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநில விவசாயிகளையும் பெருந்துன்பத்தில் தள்ளிடவே மத்திய அரசு முனைகிறது" என்று கொந்தளித்தார்.


- சி.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு