Published:Updated:

நோயாளிகள் இறக்க... மருத்துவர்கள் கொதிக்க... அரசு தன் ’கடமை’யைச் செய்கிறது!

விகடன் விமர்சனக்குழு
நோயாளிகள் இறக்க... மருத்துவர்கள் கொதிக்க... அரசு தன் ’கடமை’யைச் செய்கிறது!
நோயாளிகள் இறக்க... மருத்துவர்கள் கொதிக்க... அரசு தன் ’கடமை’யைச் செய்கிறது!

மிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் 20 - வது நாளை எட்டுகிறது.விவசாயிகள் போராட்டத்தைப் போன்று மாறுபட்ட வடிவம் பெறத் தொடங்கி உள்ளது.மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என கூறப்பட்டாலும்,நோயாளிகளுக்குப் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. "சிகிச்சைப்பெற்று வரும்நோயாளியை அழைத்துக் கொண்டுவெளியேறவும் முடியாமல் சிகிச்சை பெறவும் முடியாமல் தவிக்கிறோம்" என நோயாளிகளின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில் மருத்துவர்களோ "நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்தவகையிலும் நாங்கள் காரணம் இல்லை, எங்கள் போராட்டத்தில்  உயிர் போனாலும் மத்திய அரசு இப்படியே அமைதி காக்குமா?" என்று கொதிக்கிறார்கள்.. 

நோயாளிகள் அவதி....

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு, நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 19 -ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது.அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத்  தகவல் வெளியாகி உள்ளது.இதுதொடர்பாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனது தந்தையை  அனுமதித்துள்ள விக்னேஷ் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்."மருத்துவர்களே வருவதில்லை.அப்படியே வந்தாலும் பயிற்சி மாணவர்கள் மட்டுமே வருகின்றனர். எனது தந்தை  அனுமதிக்கப்பட்டுள்ள  படுக்கைக்கு அருகில் உள்ள ஒரு நோயாளிக்கு ஸ்கேன் எடுக்கவேண்டும்.கேட்டால் ஸ்கேன் பிரிவில் யாரும் இல்லை என்கிறார்கள். எந்தச் சிகிச்சையும் இல்லாமல்  கடந்த இரண்டு நாட்களாக அந்த நோயாளியின் உறவினர் அலைந்து கொண்டிருக்கிறார்.இதுவரை  அவருக்குச்  சிகிச்சை தொடங்கவில்லை.இது தொடர்பாக  யாரிடமும் சொல்லவும் முடியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் "என்றார்  

  மற்றொரு நோயாளியின்  நண்பர் பேசுகையில்," பெரும்பாலும்  மருத்துவமனையில்  காத்திருப்பது என்பதே மிகக் கொடுமையான விஷயம். இதில் இவர்களுடைய போராட்டதால் மணிக் கணக்கு  தற்போது நாள் கணக்காகி விட்டது.காசு இருந்தால் இங்கே ஏன்  இவர்கள்  வரப்போகிறார்கள்.எந்த நேரத்தில் என்ன ஆகிவிடுமோ என்ற பயமாக வேறு இருக்கிறது " என்றார்.

போராட்டம்  நடக்கிறதா நடக்கலையா? 

நோயாளிகள் பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் பாலசுப்ரமணியன், "நோயாளிகள் பாதிக்காதவாறு எங்களுடைய  போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது " என்கிறார்.

"கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 'நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிடவேண்டும் 'என்று அறிவுரை வழங்கினர்.அதனையடுத்துப் போராட்டத்தைத்  தற்காலிகமாக  நிறுத்தியுள்ளோம்.முழுமையாக இந்தப் போராட்டம் நிறுத்தப்படவில்லை.நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு அஹிம்சை வழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது" என்றார்.

 தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் அதே நேரத்தில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கமோ போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. 

உயிர் போனாலும் அமைதிகாக்குமா ? 

பல்நோக்கு அரசு மருத்துவமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் ,"விவசாயிகள் போராட்டத்தைப் போன்று எங்களுடைய போராட்டத்தையும்  நடத்தி வருகிறோம். பலமுறை  அரசுக்குக் கோரிக்கை வைத்த பின்பும் மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியில்லை.அதனால்தான் போராட்டம்  நடத்திக் கொண்டிருக்கிறோம்.எங்களுடைய இந்தப் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது. மத்திய அரசுதான் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.விவசாயிகள் போராட்டத்துக்கு அமைதியாக இருந்ததைப் போன்று மருத்துவர்களின் போராட்டத்துக்கும் மத்திய அரசு மௌனம் காப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.ஒரு நாட்டின் அடிப்படைசேவைகளில் இரண்டாவது இடத்தில்  உள்ள மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேறு எதற்கு இந்த அரசு முக்கியத்துவம் தரப்போகிறது என்று தெரியவில்லை.இந்தபோராட்டத்துக்குப் பின்னால் சிகிச்சை பெற வேண்டிய ஏழை நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளார்கள் என்பதை உணர்ந்து எங்களுடைய பிரச்னைகளுக்கு இந்த அரசு தீர்வு சொல்ல வேண்டும்" என்றார்.