Published:Updated:

"கையை முறுக்கி கைது பண்ணாங்க..!’’ தண்ணீருக்குப் போராடும் கதிராமங்கலம் பெண்கள் #SpotVisit

"கையை முறுக்கி கைது பண்ணாங்க..!’’ தண்ணீருக்குப் போராடும் கதிராமங்கலம் பெண்கள் #SpotVisit
"கையை முறுக்கி கைது பண்ணாங்க..!’’ தண்ணீருக்குப் போராடும் கதிராமங்கலம் பெண்கள் #SpotVisit

 "காலையில் கோலம் போடறதுக்கு வாசலுக்கு வந்துப்பார்த்தால், தெருப்பூரா போலீஸ்காரங்க" என அந்த நாளின் அதிர்ச்சி மாறாமல் சொல்கிறார், கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மகாலெட்சுமி.

பூம்புகாரிலிருந்து மதுரைக்குக் கண்ணகியும் கோவலனும் நடந்துசென்றதாகக் கூறப்படும் பாதையில் உள்ள ஊர்களில் ஒன்று, கதிராமங்கலம். கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைச் செல்லும் சாலையில் இடதுபுறம் திரும்பினால், வாழை மற்றும் தென்னந்தோப்புகளின் குளிர்ச்சியான காற்று வரவேற்க, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கதிராமங்கலம். ஊரின் வளைவைத் தாண்டினால், இப்போதும் காவல் துறையினர் முகாமிட்டிருப்பதைக் காணமுடிகிறது. வணிக வளாகத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது ஓ.என்.ஜி.சி பிளான்ட்.

சென்ற மாதத்தின் கடைசி வாரத்தில் அந்த பிளான்ட் பராமரிப்புக்கு என சில வாகனங்களில் பொருள்கள் இறக்கப்பட்டன. பராமரிப்புக்கு வழக்கமாக இவ்வளவு பொருள்கள் வராதே என்று திகைத்தனர் ஊர்மக்கள். ஷேல் ஆயில் எடுப்பதற்கான தொடக்க வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் இளைஞர்கள் சிலர், அந்த நிறுவனத்திடம் சென்று கேட்டனர். அதற்குச் சரியான பதில் சொல்லவில்லை. கேள்விக்குக் கொடுத்த பதில்களையே, உரையாடல் நடந்ததாக அறிவித்துவிட்டதாகச் சொல்கிறார்கள், கதிராமங்கலம் மக்கள். நெடுவாசலில் நடந்த போராட்டம் மக்களிடையே புதிய பார்வைகளைத் தந்திருந்தது.

இந்த மாதம் இரண்டாம் தேதி காலையில்தான் மகாலெட்சுமி கூறும் சம்பவம் நடந்தது. கதிராமங்கலத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதாகச் செய்தி பரப்பப்பட்டது. ஒவ்வொரு தெருவிலும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

 "அன்னைக்குக் கண் முழிச்சதே போலீஸ்காரங்க முகத்தில்தான். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே, 'எங்கே போறே? எதுக்குப் போறே? யாரைப் பார்க்கப் போறே?'னு ஆயிரம் கேள்விகள். ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக கறுப்புக் கொடிகளை வீட்டு வாசலில் கட்டியிருந்தோம். அதையெல்லாம் போலீஸ்காரங்க அவுத்து வீசினாங்க. 'நாங்க அமைதியாகத்தானே எங்க எதிர்ப்பை காட்டறோம்'னு சொன்னதுக்கு, 'இப்படியெல்லாம் செய்ய உங்களுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறாங்க?'னு கேட்டாங்க. எங்க ஊர்க்காரங்க சிலரையும் எங்க ஊருக்காகப் பேசினவ சிலரையும் அரெஸ்ட் செஞ்சுட்டதா கேள்விப்பட்டோம். நாங்க நாலு அஞ்சு பேர் சேர்ந்து துர்க்கையம்மன் கோவில் வழியாகப் போனோம். அங்கேயும் நிறைய போலீஸ்காரங்க நின்னுட்டு போகவிடலை. தலையாரி தெரு வழியா போகவும் விடலை. எப்படியோ கோயில் பக்கம் போய்ச் சேர்ந்தோம். அங்கே இருந்த ஆம்பளைங்களை அரெஸ்ட் பண்ணிட்டிருந்தாங்க. கயித்தால வளையம் அமைச்சு பொம்பளைங்களை பக்கத்துல போகமுடியாம செஞ்சாங்க. நாங்க திமிறிக்கிட்டு போனப்போ, கையைப் பிடிச்சி முறுக்கினாங்க. இதோ பாருங்க'' என்றபடி கைகளைக் காட்டிய மகாலெட்சுமி, தொடர்கிறார்.

''அப்புறம் நாலஞ்சு பேர் சேர்ந்து, வேனுக்குள்ளே தூக்கிப்போட்டாங்க. பக்கத்துல எங்காவது அழச்சுட்டுப்போவாங்கனு நினைச்சோம். ஆனால், ஆடுதுறை, திருவிடைமருதூர் என வண்டி போய்ட்டே இருந்துச்சு. கும்பகோணம், வட்டி பிள்ளையார் கோயில் பக்கத்துல இருந்த மண்டபத்துக்கு கூட்டிட்டுப்போய் அடைச்சுட்டாங்க. என் கையில சுத்தமா காசு இல்லை. பத்து, இருபது ரூவா வெச்சிருந்தவங்க காசு போட்டு டீ தண்ணி வாங்கி வந்தாங்க. அதை குடிச்சோம். சாயந்தரமானதும் பொம்பளைங்களை விட்டுவாங்கனு நினைச்சோம். ஆனா, ராத்திரியாகியும் விடலை. எங்க புள்ள குட்டிகளை அப்படியே வீட்ல விட்டுட்டு வந்திருந்தோம். அதுங்களுக்கு என்னாச்சோனு கவலையாயிடுச்சு. பசி வயித்தை கிள்ளுது. விடிஞ்சா ஊரே சேர்ந்து கொண்டாடுற காளியாட்டம் திருவிழா இருக்கு. அதுக்கு காப்புக் கட்டியிருக்கிற ஆளுங்களையும் புடுச்சிட்டு வந்துட்டாங்க. அவங்களை மட்டுமாவது விட்டுடுங்கனு கெஞ்சினதுக்கு 'அங்கே போராட்டம் முடிஞ்சாதம்மா விடுவோம்'னு சொன்னாங்க. திருவிழாவுக்கு பஸ்ல வந்த சொந்தக்காரங்களையும் ஊருக்குள்ளே விடலை. அவங்களும் ஏமாந்துட்டாங்க.

நைட் ஒன்பதரை மணிக்கு அப்புறம், 'நீங்களே பஸ் புடுச்சிப் போங்க'னு சொன்னாங்க. 'எங்ககிட்ட காசு இல்லை, நாங்க எப்படிப் போறது?'னு கேட்டோம். 'அப்போ இருங்க, ரெண்டாம் நம்பர் பஸ்ஸை வர சொல்றோம்'னு சொன்னாங்க. ஒரு மணி நேரமாகியும் பஸ் வரலை. கேட்டதுக்கு டிரைவர் இல்லைன்னாங்க. அப்புறம், போலீஸ் வேன்லேயே கொண்டுவந்து ஊர்ல விடும்போது, பதினொரு மணிக்கு மேலாயிடுச்சு. இப்படி எங்களை வதைக்கற மாதிரி நாங்க என்ன தப்பு செஞ்சோம்? இந்த ஓ.என்.ஜி.சி.-யால எங்க ஊரு தண்ணீர் கெட்டுப்போச்சுனு சொன்னது குத்தமா? எங்க ஊருல விவசாயம் செய்யவே முடியாதோனு கவலைப்பட்டதுக்காக இப்படிப் பண்றாங்களா?'' என வேதனையை வெளிப்படுத்துகிறார் மகாலெட்சுமி.

"என் பையன் பொறந்தப்பவே உடம்பும் மனசும் சரியில்லாமத்தான் பொறந்தான் சார். டாக்டர்கிட்ட போனால், 'தண்ணீர் சரியில்ல, காத்து சரியில்ல'னு என்னென்னம்மோ சொல்றாரு. இந்த ஊர்ல தண்ணீர் என்ன கலருல வருது பாருங்க. சர்க்கரை மாதிரி இனிச்ச தண்ணீர், உப்புக் கரிக்குது. இன்னும் என்னெவெல்லாம் ஆகப்போவுதோ தெரியலையே?" என்கிற குணசுந்தரி, தோளிலிருந்து நழுவும் மகனை அணைத்தவாறு கண்களைத் துடைத்துக்கொள்கிறார்.

கைது செய்யப்பட்டவர்களில் கல்லூரி மாணவியும் ஒருவர். அவர் அந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்களைத் தெளிவாகக் கூறுகிறார். அப்படிப் பேசுவதைப் பார்த்த காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் "இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தா உருப்படமாட்டே!" என்றாராம். "எங்க அம்மா, திடகாத்திரமா சரியான பருமனோட இருந்தாங்க சார். இப்போ பாருங்க... கேன்சர் வந்து, ஆளே உருக்குலைஞ்சுட்டாங்க. எங்க அம்மா மாதிரி ஊர்ல வேற யாரும் ஆகக்கூடாதுனு நினைக்கிறது தப்பா?" என ஆதங்கத்தோடு கேட்கிறார்.

தங்கள் நிலத்தையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க களமிறங்கியிருக்கும் பெண்களைப் பார்த்து, கதிராமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமத்துப் பெண்களுக்கும் விழிப்புஉணர்வு பெற்றிருப்பது அவர்களின் பேச்சில் தெரிகிறது. அடிப்படை உரிமைகளை காத்துக்கொள்ள போராடும் பெண்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.