Published:Updated:

‘மாணவர்களைக் கண்டு அலறும் காவல்துறை...’ கதிராமங்கலத்தின் நிலை என்ன? #SpotVisit

‘மாணவர்களைக் கண்டு அலறும் காவல்துறை...’ கதிராமங்கலத்தின் நிலை என்ன? #SpotVisit
‘மாணவர்களைக் கண்டு அலறும் காவல்துறை...’ கதிராமங்கலத்தின் நிலை என்ன? #SpotVisit

‘மாணவர்களைக் கண்டு அலறும் காவல்துறை...’ கதிராமங்கலத்தின் நிலை என்ன? #SpotVisit

கதிராமங்கலம் கிராமத்து மக்கள் ஒ.என்.ஜி.சியைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேராசியரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் விடுதலை, ஒ.என்.ஜி.சி குழாய் அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தற்போது போராட்டத்தில் அனைவரும் முன்வைக்கும் மற்றொரு கோரிக்கை, 'கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற வேண்டும்' என்பதே. அதற்கான காரணம் காவல்துறையின் அடக்குமுறைகளும் அத்துமீறல்களுமே.

இதுகுறித்து பேசிய கதிராமங்கலம் கிராமத்து இளைஞர் பார்த்திபன் (27), ''ஜூன் 30-ம் தேதி, ஒ.என்.ஜி.சி குழாய் வெடித்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். மேலும், மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். ஆனால், காவல்துறையினரே தீ வைத்து விட்டு, எங்கள் மீது தடியடி நடத்தினர். இதில் எங்கள் கிராமத்துப் பெண்களும் தாக்கப்பட்டனர். இதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கருச்சிதைவும் ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னால் வந்த அதிகாரிகள், ஒ.என்.ஜி.சி குழாயை பார்த்துவிட்டு, அது பாதுகாப்பாக இருப்பதாக செய்தி சானல்களுக்கு பேட்டி கொடுத்து விட்டுச் சென்றனர். இந்த விவகாரத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மிக மோசமான அடக்குமுறையை காவல்துறையினர் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்'.

இது ஒருபுறம் இருக்க, கதிராமங்கலம் கிராமத்துக்குள் மாணவர்கள் வரக் கூடாது என்பதில் காவல்துறையினர் உறுதியாக உள்ளனர். மாணவர்களின் ஆதரவு எங்கள் போராட்டத்துக்கு கிடைக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இதற்காக கதிராமங்கலம் ஊருக்குள் வரும் அனைத்து வழிகளிலும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். இந்த வழியாக வரும் பேருந்துகளில் ஏறி, அதில் மாணவர்கள் இருந்தால் தேவையின்றி விசாரிக்கிறார்கள். அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், எங்கள் ஊர் மாணவர்களும் எந்தவித போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக, அவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகத்தையும் மிரட்டி வைத்துள்ளனர். கதிராமங்கலத்தைக் காக்க மாணவர்கள் முயற்சிக்கக் கூடாது என்று அவர்களை பயமுறுத்தப் பார்க்கிறது காவல்துறை. ஜல்லிக்கட்டுக்காக நடந்ததுபோல மீண்டும் மாணவர்கள் ஒன்றிணைந்து போராடக் கூடாது என்பதில் அதிகாரவர்க்கம் தெளிவாக உள்ளது' என்கிறார் அவர்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘பெண்கள் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது' என்று கூறியது, கதிராமங்கலத்தில் போராடுவோர் மத்தியில் கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக கதிராமங்கலம் பெண்கள் இந்த விமர்சனத்துக்குக் கடுமையான கண்டனங்களை முன்வைக்கின்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கஸ்தூரி (48) கூறுகையில், ‘கடந்த 16-ம் தேதி, சென்னை சட்டக்கல்லூரியில் இருந்து 4 மாணவர்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இங்கு வந்தனர். அதனால் அவர்களைக் கைது செய்வதிலேயே காவல்துறை குறியாய் இருந்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘போராட்டத்துக்கு ஆதரவளிக்க வருகிறார்கள் என்று கண்டவர்களையும் உள்ளே விடுகிறீர்களே, அவர்கள் எல்லாம் ஐ.எஸ் தீவிரவாதிகள். நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்களால் உங்கள் வீட்டுப் பெண்களுக்கு எதாவது நடந்தால் என்ன செய்வீர்கள்’ என்று சொல்கிறார்கள். எங்கள் வாழ்வாதார போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வரும் மாணவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று கூறுவது நியாயமா..?

எந்நேரமும் காவல்துறையினர் எங்கள் கிராமத்திலேயே இருக்கிறார்கள். அறப்போராட்டம் நடக்கும் இந்த அய்யனார் கோவில் அருகிலும் எங்களைக் கண்காணித்து வருகின்றனர். இதனால் பெண்கள் எங்கும் ஒதுங்கக் கூட முடியவில்லை. அத்தோடு உளவுத்துறை போலீஸாரும் எங்கள் கிராமத்தைத் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனால் ஒருவித அச்ச உணர்வுடனே நாங்கள் உள்ளோம். இந்நிலையில், போராட்டத்தின்போது ஒரு காவல்துறை அதிகாரி, எங்கள் கிராமத்து இளம்பெண் ஒருவரிடம், உன்ன பாத்தாலே நக்சலைட் மாதிரிதான் இருக்கு. மொதல உன்ன தூக்கி உள்ள வைக்கனும்' என்கிறார். மாநிலத்தின் முதலமைச்சரே பெண்கள் போராடுவது ஃபேஷன் என்று கூறியிருக்கிறார். பிறகு அவருக்கு கீழே இருக்கும் காவல்துறையிடம் எப்படி நாங்கள் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும். எங்களை எவ்வளவு கேவலப்படுத்தினாலும், அடுத்த தலைமுறைக்காக இந்த மண்ணை காப்பற்ற நாங்கள் போராடியே தீருவோம்' என்கிறார் ஆவேசமாக.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் காவல்துறையினர் ஆடிய வெறியாட்டம், இனி யாரும் இதுபோல போராட்டத்தில் இறங்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனாலும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மாணவர்கள் தெரிந்துகொண்டது, போராடித்தான் நம் உரிமையை மீட்க வேண்டும் என்பதே. அப்படி போராட வருபவர்களை அதிகாரத்தைக் கொண்டு அரசும் அதன் காவல்துறையும் மிரட்டிப் பார்ப்பது ஜனநாயகமாகாது. அப்படி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக்கொண்டு போராட முற்படுபவர்களின் மீது தீவிரவாதி என்றும் நக்சலைட் என்றும் முத்திரை குத்துவது சர்வாதிகார போக்கு. இது அத்தனையும் தாண்டி, கதிராமங்கலம் காக்க மாணவர்கள் முடிவெடுத்துவிட்டால், அதை அவ்வளவு எளிதில் இந்த அரசால் அடக்கிவிட முடியாது.

அடுத்த கட்டுரைக்கு