Published:Updated:

சி.ஏ.ஏ: சட்டம் நிறைவேறி நூறு நாட்கள்: இதுவரை நடந்தவற்றின் தொகுப்பு

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) நிறைவேற்றப்பட்டு நூறு நாள்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில் கடந்த நாறு நாள்களாக ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த தொகுப்பே இந்தக் கட்டுரை.

மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை நிறைவேற்றியதிலிருந்தே அதற்கு வலுவான எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. உள்நாட்டு விவகாரம் என்பதையும் தாண்டி ஐ.நா தொடங்கி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் வரை சி.ஏ.ஏ விவாதப் பொருளானது. இந்தியாவின் நட்பு நாடுகளுமே சி.ஏ.ஏ-வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளன.

சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள்
சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள்

சி.ஏ.ஏ-வை தனித்துப் பார்த்தால் அண்டை நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமே. ஆனால் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆரைத் தொடர்புபடுத்தி பார்த்தால்தான் சிக்கல் புரியும். அதற்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டைப் (என்.ஆர்.சி) பார்க்க வேண்டும். 19 லட்சம் பேர் குடியுரிமை இழந்துள்ளனர். சி.ஏ.ஏ நிறைவேறினால் இவர்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இயல்பாகக் குடியுரிமை பெற நேரும். இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பல்வேறு கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

இதே பின்னணியில்தான் நாடு முழுவதும் என்.ஆர்.சி கொண்டு வரப்படும் என பா.ஜ.க-வின் பல தலைவர்களும் பேசத் தொடங்கினர். அதற்கு முன்னோட்டமாக சென்சஸ் உடன் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. போராட்டங்களில் சி.ஏ.ஏ கூடாது என்பது மட்டுமல்லாமல் என்.பி.ஆர் - என்.ஆர்.சியையும் கைவிட வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. என்.ஆர்.சிக்கான முன்னோட்டமே என்.பி.ஆர் என்பது 2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தத்திலே இடம்பெற்றுவிட்டது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

என்.ஆர்.சிக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் வலுவாகவே அதைத் தொடர்ந்து என்.ஆர்.சி தற்போதைக்கு மேற்கொள்வது பற்றிய பேச்சு இல்லை என்று மோடியும், அமித் ஷாவும் தெளிவுபடுத்த தொடங்கினர். என்.ஆர்.சி இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. என்.ஆர்.சி பற்றிய பேச்சு தற்போதைக்கு இல்லை என்றே மத்திய அரசு கூறிவந்தது. ஆனால் மத்திய அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாடு முழுவதும் என்.ஆர்.சி அவசியமானது என்று தெரிவித்துள்ளது. சி.ஏ.ஏ விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின்வாங்கப்போவதில்லை என்றும் மத்திய அரசு சொல்லி வருகிறது.

நம்மை மட்டும் அல்ல... AI-யையும் நெருக்குகிறது கொரோனா! #LongRead

போராட்டங்கள் - காவல் துறை அத்துமீறல்கள்:

வட கிழக்கில் தொடங்கிய போராட்டங்கள், நாளடைவில் இந்தியா முழுவதும் பரவின. பல்கலைக்கழகங்களில் தொடங்கிய போராட்டங்கள் மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கின. ஜாமியா மிலியா, அலிகர் பல்கலைக்கழகங்களில் காவல்துறை மூர்க்கத்தனமாக மாணவர்களைத் தாக்கியது. ஜே.என்.யூ-வில் கலவரம் நிகழ்த்தப்பட்டபோது காவல்துறை காட்சியில் இல்லாமல்போனது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 23 பேர் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

vikatan infographic
vikatan infographic

பிப்ரவரி இறுதி வாரத்தில் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் டெல்லி காவல்துறையே சி.சி.டி.வி கேமராக்களை உடைக்கும் காட்சிகள் வெளியாகின. பல இடங்களில் காவல்துறை கலவரக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காட்சிகளும் வெளிவந்தன. இது சர்வதேச அளவில் எதிர்ப்புகளைச் சந்தித்தது.

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடங்கிய உள்ளிருப்புப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுகள்:

நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி சி.ஏ.ஏ சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆட்சி செய்கிற மாநிலங்களிலிருந்து எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்தன. கேரளா இதற்கு முன்னோடியாக அமைந்தது. சி.ஏ.ஏ - என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியதோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

சி.ஏ.ஏ - என்.பி.ஆர் விவகாரத்தில் மாநில அரசுகளின் நிலைப்பாடு என்னவென்பதை கீழே உள்ள இன்டெராக்டிவில் காணலாம்...

கேரளாவைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றத் தொடங்கின. சி.ஏ.ஏ-வை ஆதரித்த ஆந்திரா - ஒடிசா - பீகார் மாநில அரசுகளும் என்.பி.ஆர் நிறைவேற்றப்படாது என்று அறிவித்திருக்கின்றன. கேரளா தொடங்கி இறுதியாக டெல்லி வரை 13 மாநில அரசுகள் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றன. இந்திய வரலாற்றில் மத்திய அரசை மாநில அரசுகள் எதிர்ப்பது இதுவே முதல்முறை.

நீதித்துறையின் தோல்வி:

சி.ஏ.ஏ சட்டம் நிறைவேற்றப்பட்டதுமே, நீதிமன்றத்தின் முன் இது செல்லாது என்கிற குரலை பலரும் வைத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் சி.ஏ.ஏ-வை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கேரளா, ராஜஸ்தான் அரசுகள் தொடர்ந்த வழக்குகளும் அடக்கம். இந்த வழக்கில் புதிய திருப்பமாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையரும் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியா எவ்வாறு சர்வதேச சட்டங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது” என்பதை விளக்கியிருந்தார். இன்று வரை இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.

vikatan infographic
vikatan infographic

சி.ஏ.ஏ வழக்கை விசாரித்து முடிக்கின்ற வரையில் அதைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்திருந்தாலே போராட்டங்கள் தீவிரமடைந்திருக்காது. டெல்லி வன்முறை பற்றிக் கேள்வியெழுப்பிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அன்றைய தினமே பஞ்சாபுக்குப் பணியிடம் மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் சி.ஏ.ஏ வழக்கில் மத்திய அரசு 130 பக்கம் கொண்ட பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவான வாதங்களை அதில் முன்வைத்துள்ளது. மேலும் அதில் என்.ஆர்.சி என்பது அவசியமானது என்று தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களைக் கடந்தும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள நிலையில் போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு போராட்டங்களைக் கைவிட வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. டிசம்பர் மாதம் கொளுத்தப்பட்ட சி.ஏ.ஏ நெருப்பு தற்போது வரை அணையவில்லை..

அடுத்த கட்டுரைக்கு